15 வருடங்களுக்கு பின் மீண்டும் வில்லன்: ரஜினியின் தர்பாரில் பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,May 23 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி மீண்டும் மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரதீக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்த்ராஜ், உள்பட ஒருசில நடிகர்கள் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் மெயின் வில்லன் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஆம், பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி இந்த படத்தின் முக்கிய வில்லனாகிறார்.

'காலா' படத்தில் நானா படேகரும், '2.0' படத்தில் அக்சயகுமாரும் வில்லன்களாக நடித்த நிலையில் தற்போது 'தர்பார்' படத்தில் சுனில்ஷெட்டி வில்லனாகிறார். 15 ஆண்டுகளுக்கு முன் ஷாருக்கானின் Main Hoon Na' என்ற படத்தில் வில்லனாக நடித்த சுனில்ஷெட்டி அதன்பின் 'தலைவர்' படத்தில்தான் வில்லனாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சுனில்ஷெட்டி கலந்து கொள்வார் என்றும் ரஜினி, சுனில்ஷெட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்போது படமாக்கபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, உள்பட பலர் நடித்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.