நாடாளுமன்றத்தில் "Propose" செய்த எம்.பி..!
- IndiaGlitz, [Monday,December 02 2019]
இத்தாலி நாட்டில் எம்பி ஒருவர் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, தனது தோழியிடம் காதலை கூறிய சம்பவம் உலக அளவில் பிரபலமாகியுள்ளது. பூகம்பத்திற்கு பிந்தைய புனரமைப்பு தொடர்பான விவாதம் இத்தாலி நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். ஃப்ளாவியோ டி முரோ என்ற எம்.பி-யின் முறை வந்தது.
அப்போது சபையில் எழுந்து நின்று பேசிய அவர், நாங்கள் ஒவ்வொரு நாளும் தேசிய அவசரநிலைகளில் பிஸியாக இருக்கிறோம். நாங்கள் பெரும்பாலும் எங்களை உண்மையாக நேசிப்பவர்களை மற்றும் கவனித்துக்கொள்பவர்களை புறக்கணிக்கிறோம் என்று உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இவ்வாறு பேசிக்கொண்டே பார்வையாளர்கள் மாடத்தில் உட்கார்ந்திருந்த தன் தோழியான எலிசா டி லியோவைப் பார்த்து, தன் மேஜைக்கு அடியில் இருந்து எடுத்து மோதிரம் ஒன்றை உயர்த்தி காட்டி, நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா எலிசா என தனது காதலை முரோ வெளிப்படுத்தினார்.இதை கேட்டு எலிசாவும், அவையில் இருந்த அனைவரும் ஒரு கணம் ஆச்சர்யத்தில் திகைத்தனர். பின்னர் சக எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்தினர். பின்னர் பேசிய சபாநாயகர் ராபர்டோ ஃபிகோ, உங்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நாடாளுமன்றத்தை இவ்வாறு பயன்படுத்தக் கூடாது என கடிந்து கொண்டார்.
பின்னர் வெளியான தகவல்களின் படி எம்பி முரோவின் காதலை எலிசா ஏற்று கொண்டதாகவும், விரைவில் அவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.