கொரோனா வைரஸால் கை விரல்கள் அழுகிய கொடூரம்…. இன்னும் சில பகீர் தகவல்கள்!
- IndiaGlitz, [Monday,February 15 2021]
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதயத்தில் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, ஏன் மூளையில் கூட பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு 3 கை விரல்கள் அழுகி கறுப்பு நிறமாக மாறிய கொடூரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இதனால் அந்த மூதாட்டியின் அழுகிய விரல்கள் தற்போது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது.
இதுகுறித்து என்டா வாஸ்குலர் சர்ஜரி எனும் ஆய்விதழ் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அதில் 81 வயதான அந்த மூதாட்டிக்கு கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்றும் இந்நோய் எந்த அறிகுறியையும் ஏற்படுத்த வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மூதாட்டியின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அதன் செயல்திறன் முற்றிலும் குறைந்து இருக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்ததின் அளவு குறைந்து மேலும் ரத்த உறைவு நோய் ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரத்தம் உறைவுக்கான மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்து உள்ளனர். ஆனால் வயது முதிர்வு காரணமாக இந்த மாத்திரைகள் அவருக்கு வேலை செய்யவில்லை என்றும் ரத்த உறைவின் உச்சப்பட்சமாக அவரின் கை விரல்கள் தற்போது அழுகிப் போய் இருக்கின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுபோன்ற ரத்த உறையும் அறிகுறி 30% பேருக்கு இருப்பதாக லண்டனை சேர்ந்த மருத்துவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதனால் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கடும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.