கொரோனா விஷயத்தில் உலக நாடுகள் மெத்தனம் காட்டினால் “அது இரண்டாவது உச்சத்தைக் காட்டிவிடும்” – WHO எச்சரிக்கை!!!

  • IndiaGlitz, [Tuesday,May 26 2020]

 

கொரோனா பரவல் எண்ணிக்கை உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை தளர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா விஷயத்தில் அரசுகள் தீவிரமாகச் செயல்படாமல் இருந்தால் அது “உடனடியாக இரண்டாவது உச்ச நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்” என WHO அவசர நிலை இயக்குநர் மைக் ரியான் எச்சரித்துள்ளார். பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே இக்கிறது என ஊரடங்கைத் தளர்த்தும் போதும், கொரோனா பரிசோதனைகள் குறையும் போதும் அதனால் ஏற்படும் பாதிப்பு முதலில் ஏற்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்காசியா, அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நாடுகளில் கொரோனா தனிமைப்படுத்தல், தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் கொரோனா சோதனையை அதிகப்படுத்தல் போன்ற உடனடி வேலைகளில் அரசாங்கங்கள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று மைக் ரியான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நோய்த்தொற்று எந்நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உலக நாடுகள் உணர்ந்திருக்க வேண்டும். நோய் குறைந்து இருக்கிறது என நாம் வெறுமனே இருந்து விடக்கூடாது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டாவது அலை மிகவும் உச்சமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஐரோப்பா போன்று பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகள் மேலும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். முதல் கொரோனா அலையால் ஏற்பட்ட பாதிப்புகளையே பல நாடுகள் இன்னும் சரிசெய்யாமல் இருக்கின்றன. இந்நிலையில் இரண்டாவது பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும். எனவே தொடர்ந்த கண்காணிப்பு, தனிமைப்படுத்தல், கொரோனா பரிசோதனையை செயல்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை செயல்பாடுகள் குறைந்தது 10 மாதத்திற்கு தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.