வெளிநாட்டு இறக்குமதியில் இனி இது மட்டும் கூடாது!!! கெடுபிடிக் காட்டும் மத்திய அரசு!!!
- IndiaGlitz, [Friday,July 31 2020]
இந்தியாவில் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து கலர் டிவிக்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. முன்னதாக சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தொழில்நுட்பம் சார்ந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றன. அதனால் ஸ்மாட் போன் உள்ளிட்ட பல தொழில்நுட்ப சாதனங்கள் சொந்த தயாரிப்பிலேயே உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கலர் டிவிக்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதனால் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையில் மேம்பாடு நடக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு 78.10 கோடி டாலர் மதிப்பிலான டிவிக்கள் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் சீனாவில் இருந்து 29.20 கோடி டாலர் மதிப்பிலான டிவிக்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடுத்து வியட்நாமில் இருந்து 42.80 கோடி டாலர் மதிப்பிலான டிவி இறக்குமதிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல மலேசியா, ஹாங்காங், கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி போன்ற நாட்டு தயாரிப்புகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்தக் கட்டுப்பாடுகளால் சீனாவிற்கு கடும் இழப்பீடு ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்டு இருக்கும் எல்லைப் பிரச்சனையில் சீனாவிற்கு இடையிலான வர்த்தகம் மற்றும் ஒப்பந்தத்தில் கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதுவரை 106 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விக்கப்பட்டுள்ளன. தற்போது டிவிக்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இனிமேல் கட்டாயத்தின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட நேர்ந்தாலும் இந்திய நிறுவனங்கள் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயக்குநரகத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.