நடிகர் கமல்ஹாசன் கட்சி-பொருளாளர் வீட்டில் அதிரடி ரெய்டு!
- IndiaGlitz, [Thursday,March 18 2021]
நடிகர் கமல்ஹாசன் தலைமையேற்று நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராகத் தொழிலதிபர் சந்திரசேகரன் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழக அரசின் மகப்பேறு பை உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகம், உறவினர், நண்பர்களின் வீடுகளில் அதிரடி வருவமான வரி சோதனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருமான வரிச் சோதனையில் கிட்டத்தட்ட ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அனிதா டெக்ஸ்காட் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் சந்திரசேகரன் தமிழக அரசின் முகக்கவசம், சானிடைசர் போன்ற பொருட்களை வழங்கும் திட்டத்தின் ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார். மருத்துவ உபகரணங்களையும் சொந்தமாக தயாரித்து வருகிறார். அதேபோல கடந்த மாதம் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து துவங்கப்பட்ட Rajkamal Frontiers private limited எனும் நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.
இப்படி இருக்கும் சந்திரசேரன் வீடு மற்றும் அலுவலகத்தில் 8 அதிகாரிகள் இணைந்து வருமான வரி சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் முதலீடு, வரவு, செலவு குறித்த ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இவருடைய சொந்த சகோதரரும் மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளரும் உள்ள கவின் நாகராஜன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சந்திரசேகரனின் நண்பரும் சென்னியப்பா நகர் பகுதியில் உள்ள திமுக நகர செயலாளருமான தனசேகர் வீட்டிலும் வருமான வரி அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி மக்கள் நீதி மய்யம், மதிமுக, திமுக என தொடர்ந்து வருமான வரி சோதனை நடப்பதைக் குறித்து சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. திருப்பூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவரான எல்.முருகன் போட்டியிடுகிறார். அதேபோல நடிகர் கமல்ஹாசன் வேட்பாளராக நிற்கும் கோவை தேற்கு தொகுதியில் பாஜகவின் முக்கிய வேட்பாளரான வானதி சீனிவசான் நிற்கிறார். இந்நிலையில் இத்தொகுதிகளை மட்டும் குறிவைத்து சோதனைகள் நடத்தப்படுவது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.