கொரோனா பீதியால் தென்னந்தோப்புக்கு மாறிய ஐடி அலுவலகம்: சுவாரஸ்ய தகவல் 

கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகமெங்கும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் தங்களது ஊழியர்களுக்கு கொரோனா பரவுவதை ஓரளவு தடுக்கலாம் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பெங்களூரில் அரவிந்தன் என்பவர் ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் தலைமை பொறுப்பில் பணி செய்து வருகிறார். இவரது அலுவலகத்திலும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து இவர் தன்னுடைய தலைமையில் உள்ள எட்டு ஊழியர்களை தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி என்ற கிராமத்திற்கு அழைத்து வந்தார். அங்கு தங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து இயற்கையான சூழலில் பணி புரிய வைத்துள்ளார்.

தென்னந்தோப்பு நிழலில் இளநீர் இளநீர் உள்பட இயற்கையான உணவுகளை சாப்பிட்டு கொண்டு, இயற்கைச் சூழலில் ஊழியர்கள் லேப்டாப் மூலம் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். ஏசி அறையில் அடைந்து கிடந்த தங்களுக்கு இயற்கையான சூழ்நிலையில் இயற்கை உணவுகளுடன் பணிபுரிவது வித்தியாசமான அனுபவமாக இருப்பதாக அந்த ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே முறையை மற்ற ஐடி நிறுவன ஊழியர்களும் கடைபிடிக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டு வருகிறது.