யூடியூபருக்கு கோடிக்கணக்கில் சம்பளமா? ஐடி ரெய்டில் வசமாக சிக்கிய சம்பவம்!
- IndiaGlitz, [Tuesday,July 18 2023]
ஏற்கனவே கேரளாவில் பிரபல யூடியூபர்கள் பல பேர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த நிலையில் முறையாக வருமான வரிச் செலுத்தவில்லை என்று அடுக்கடுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது உத்திரப் பிரதேசத்திலும் நடந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பேர்லி நகரத்தில் வசித்துவரும் தஸ்லிம் என்பவர் டிரேடிங் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். டிரேடிங் ஹப் 3.0 எனப்படும் அந்த சேனலில் 1.2 கோடி ரூபாய் சம்பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய சம்பளத்திற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தஸ்லின் வீட்டில் இருந்து ரூ.24 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துபேசிய தஸ்லினின் சகோதரர் ஃபெரோஸ் யூடியூப் வழியாக 1.2 கோடி சம்பளம் கிடைப்பது உண்மைதான். அதற்கு ரூ.4 லட்சம் வரியைச் செலுத்திவிட்டோம். இந்த சோதனை திட்டமிட்டு நடத்தப்படும் சதி என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று அவரது தாயும் இந்தக் குற்றாச்சாட்டில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கேரளாவில் யூடியூப் சேனல் நடத்திருவம் பலரும் கார், சொகுசு வீடு என்று வாழ்ந்துவரும் நிலையில் அவர்கள் தங்களது சம்பளத்திற்கு முறையாக வருமான வரிசெலுத்தவில்லை என்று குற்றம் சட்டப்பட்டது. இதையடுத்து கொச்சி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.25 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் உத்திரப்பிரதேசம் பகுதியில் பிரபல யூடியூப் சேனல் நடத்திவருபவர் வருமான வரிச்செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.