ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள். இஸ்ரோவின் உலக சாதனை.
- IndiaGlitz, [Wednesday,February 15 2017]
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை இணைத்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இந்த சாதனைக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பாரத பிரதமர் நரேந்திரமோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி சி-37 என்ற ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை செலுத்தும் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக் கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக் கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக் கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளது.
வரைபடப் பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர் விநியோகம், தரை பயன்பாட்டு வரைபடங்கள், புவியியல் சார்ந்த அம்சங்கள் என பலவிதங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கு இந்த செயற்கைக்கொள்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் இந்த உலக சாதனையை பல ஊடகங்கள் கண்டுகொள்ளாமல், இன்னும் சசிகலா சம்பந்தப்பட்ட செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது துரதிர்ஷ்டமான ஒரு நிலையாக கருதப்படுகிறது.