கோவை பொதுக்கூட்டத்தில் சிக்கி கொண்ட ஐயப்ப பக்தர்களுக்கு சாலையை கடக்க உதவிய இஸ்லாமியர்கள். வீடியோ.
- IndiaGlitz, [Saturday,December 21 2019]
கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் சாலையில் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது சாலையை கடக்க முடியாமல் தவித்த ஐயப்ப பக்தர்களுக்கு சிலர் உதவி செய்த வீடியோ இப்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கோவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மாலை ஆற்றுப்பாலத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் மாலை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் வேளையில், போராட்டத்திற்கு வந்திருந்த இஸ்லாமியர்கள் நடு ரோட்டிலேயே வரிசையாக நின்று தொழுகை நடத்தினர். இதனிடையே பொது கூட்டத்தினை கடக்க முடியாமல் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து வந்த பக்தர்கள் தவித்தனர்.
அப்போது இஸ்லாமியர்கள் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல், அவர்களுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் சாலையைக் கடந்து போக உதவி செய்தனர் . இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
#கோவை-யில் பிராமாண்ட பொதுக்கூட்டத்தின் போது சாலையில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார். அப்போது கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அய்யப்பன் பக்தர்களை பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்தனர்.#CAAProtest | #Covai pic.twitter.com/aHLtyuaXFe
— Vijay (@vijay_journo) December 21, 2019