களத்தூர் கிராமத்தின் ஹீரோவாக மாறிய இசைஞானி
- IndiaGlitz, [Saturday,August 19 2017]
இசைஞானி இளையராஜாவின் இசை பல திரைப்படங்களுக்கு ஹீரோவாக இருந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பெரிய இயக்குனர்கள், பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் அதில் இசைஞானியின் இசை முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ளது என்பதை பல திரைப்படங்கள் நிரூபித்துள்ளது.
இந்த நிலையில் இசைஞானியின் இசை ஹீரோவாக இருக்கும் இன்னொரு திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதுதான் 'களத்தூர் கிராமம்
சரண் கே.அத்வைதன் இயக்கியுள்ள இந்த படத்தில் கிஷோர் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் யாக்னா ஷெட்டி என்ற தெலுங்கு நடிகை நாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆந்திரா, தமிழ்நாடு எல்லையில் உள்ள வறட்சியான பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை
இந்த படத்தின் இசை குறித்து இயக்குனர் கூறியபோது, 'நாங்கள் முதலில் ஸ்க்ரிப்டை தயார் செய்தவுடன் இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கிராமிய படங்களுக்கு இசையமைக்க அவரை விட்டால் பொருத்தமானவர் வேறு யாரும் கிடையாது. ஸ்கிரிப்டை முழுவதும் படித்து முடித்த இசைஞானி, படத்தை முடித்துவிட்டு வாருங்கள், இசையமைப்பது குறித்து யோசிக்கின்றேன் என்று கூறினார்.
அவர் கூறியதை போலவே படத்தை முடித்து அவருக்கு போட்டு காட்டினோம். படத்தை பார்த்து முடித்ததும் அவரது கண்களில் கண்ணீரை நாங்கள் பார்த்தோம். இந்த படத்திற்கு வித்தியாசமாக எதாவது செய்து தருகிறேன்' என்று அவர் உறுதியளித்தார். அவர் கூறியது போலவே அவரது இசைதான் இந்த படத்தின் ஹீரோவாக மாறியுள்ளது' என்று இயக்குனர் கூறினார்.
ஏ.ஆர் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படம் சென்சாரில் யூஏ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், ரிவைசிங் கமிட்டிக்கு சென்று ஒருசில காட்சிகளை நீக்கி யூ சான்றிதழ் பெற முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது