எல்.கே.ஜிக்கு ரூ.2 லட்சமா? இது என்னடா பகல் கொள்ளையா இருக்குது!

  • IndiaGlitz, [Sunday,March 11 2018]

பெங்களூர் பள்ளி ஒன்று எல்.கே.ஜி படிப்பிற்கு ரூ.2லட்சத்து 2 ஆயிரம் தொகை வசூலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள கையேடு ஒன்று இணணயதளங்களில் வைரலாகி வருகிறது

அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் கெளரவத்திற்கு இழுக்கு என்ற எண்ணத்தில் பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வகுப்பினர்களும் கடன்வாங்கி தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை அடித்து வருவது குறித்து அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் பெங்களூர் எம்.ஜி.ரோடு அருகேயுள்ள செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி இந்த கல்வி ஆண்டிற்கான எல்.கே.ஜி படிப்புக்கான கட்டண தொகை குறித்த கையேட்டை பெற்றோர்களுக்கு விநியோகம் செய்துள்ளது. அதில் கேள்வியே படாத பலவகையான கட்டணங்கள் குறிப்பிடப்பட்டு மொத்தம் ரூ. 2 லட்சத்து 2 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பள்ளி மட்டுமின்றி பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகளின் கட்டணம் கிட்டத்தட்ட இதேபோன்றுதான் உள்ளது. அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, அதன் பின்னர் அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தால் கூட மொத்தமாக இந்த கட்டணம் வராது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தவகை தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் அரசுடமை ஆக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.