நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணியை எதிர்க்கும் வலுவான அணி!
- IndiaGlitz, [Tuesday,June 04 2019]
நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் மற்றும் பொருளாளர் பதவிக்கு கார்த்தி உள்பட ஏற்கனவே பதவியில் இருக்கும் நிர்வாகிகள் போட்டியிடவுள்ளனர்.
இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால் இருவரும் போட்டியிட முடியாத நிலை உள்ளது. எனவே சரத்குமார் மனைவியும் நடிகையுமான ராதிகா தலைமையில் ஒரு அணி உருவாகும் என வதந்தி கிளம்பியது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி விஷாலின் பாண்டவர் அணியை பிரபல கல்வியாளரும் நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகியுமான ஐசரி கணேசன் தலைமையிலான ஒரு அணி எதிர்த்து களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பில் இருந்த விஷால் அணியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி வரும் ஐசரி கணேசன் தரப்பினர் தேர்தலுக்காக புதிய அணியை அமைக்கும் பணியில் இருப்பதாகவும், ஐசரி கணேசன் தலைமையிலான அணியில் நடிகர் உதயா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் நடிகர் சங்க பொறுப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் இந்த அணி வலுவானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.