ஏ.ஆர். ரகுமான் - எத்தனை கோடி இன்பம் வைத்தார்!!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு T-Series 90 Audio Cassette. முதல் பாடல் மின்சாரகனவு படத்தில் வந்த "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..". இரண்டாவது பாடல் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..". மூன்றாவது பாடல் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..". நான்காவது ஐந்தாவது என அந்த பாடலே ஓட, கேசட்டை திருப்பிப் போட்டேன். மீண்டும் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..".என ஒலிக்க ஆரம்பித்தது.
பிறகுதான் புரிந்தது அந்த கேசட்டின் எல்லா பாடல்களும் அதுமட்டுந்தான் என.. எல்லா சாலைகளும் ரோமை நோக்கி போவது போல...
நண்பன் காதலிக்கும் பெண்ணிடம் பேசி அவளை காதலிக்க வைக்க வேண்டும் என்கிற கடினமான வேலையில் எதிர்பாராவிதமாக அவனே காதலில் விழுந்துவிடுகிறான். அவன் பாடுவான். ஆடுவான். பெண்களை கவர்வதில் வல்லுனன். ஆனால் அவள் கண்களின் வீச்சில் காணாமல் போவோம் என நினைத்திருக்கவே மாட்டான். அது நிகழ்ந்த கணத்தில் அவனுள்ளிருந்து எழுகிறது இந்தப்பாடல்.
காதலில் பாடல்களுக்கு குறைவில்லை. எப்போதும் ஒரு தாளம் உள்ளே ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒருதலைக் காதலென்றால் அது இன்னமும் சிறப்பு. அப்போதுதான் எழுந்த காதலென்றால் கேட்கவே வேண்டாம். ஆயிரம் வயலின்கள் அடிநெஞ்சில் கதற அந்த நொடியை நிரப்ப இசை மட்டுமே போதும். வார்த்தைகள் வேண்டாம்.
இன்னொருவன் இதயத்திற்குள் சென்று அந்த இசையை கொணர்வது எளிமையான காரியமா என்ன? அதேபோல் ஓராயிரம் மனிதர்கள் அந்த நொடியில் காதல்வயப்பட்டிருக்கலாம். அவ்வளவு பேர் உள்ளேயும் புகுந்து எதுத்து வந்த ஒரு இசைதான் இந்தப்பாடல் என நான் அறுதியிட்டுக் கூறுவேன்.இந்த வெண்ணிலவு தருணத்தில் ஏ.ஆர்.ரகுமான் இறைவனாகிறார் என நான் கூறினால் அவரோ "எல்லா புகழும் இறைவனுக்கே.." என பதில்மொழி கூறுவார். இந்த நகைமுரண்தான் அல்லா ரக்கா ரகுமானின் இசை சொல்லும் பாடம்.
ஒரு புறாவின் அசைவுகளை நீங்கள் கவனித்ததுண்டா? அது மெல்ல தன் பின்புற இறகுகளை அசைக்கும் அழகை விவரிக்க வார்த்தைகள் உண்டா? அது தன் கழுத்தை அலகோடு சேர்த்து ஆட்டும் அந்த அழகை எப்படி விளக்குவது? தோற்றுப் போய்விடும் அல்லவா மொழிகள்? ஆனால் இசை????
"மசக்கலி..." கேளுங்கள். காணொளி வேண்டாம். பாடல் வரிகள் வேண்டாம். வெறும் இசை மட்டும் கேளுங்கள். கோவில் கோபுரம், தேவாலய மணிக்கூண்டு, மசூதியின் பிறை, குருத்துவாரா-வின் உச்சி என எல்லா இடத்திலும் வீற்றிருக்கும் ஒரு வெண்புறாவின் சின்ன சின்ன அசைவுகள் ஒரு சித்திரமாய் உங்களுக்குள் விரியும். சொல்லவொண்ணா மகிழ்ச்சியில் மனம் அந்த புறாவின் சிறகைப்போல் விரித்து வேகத்தடை இல்லாத வானத்தில் பறக்கும். சரேலென கீழிறங்கி இரையை கொத்தி அதே வேகத்தில் மீண்டும் பறக்கும்.பின் உங்கள் கைகளில் வந்து தஞ்சமடையும். அந்த இசை எல்லா இடைவெளிகளையும் நிரப்பும். வெறுமையை எரிக்கும். வேதனைகளை கறுக்கும். புன்னகை ஒன்றை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு போகும்.
ஒரு கடலின் கரையில் இருக்கும் சின்ன திண்டின் மீது அமர்ந்து உங்கள் காதலியை எதிர்நோக்கி காத்திருக்கிறீர்களா? நேரம் கடக்கிறதா? சுற்றியிருக்கும் எல்லாரும் கடலின் அலைகளில் கரைந்து காணவொண்ணா சந்தோசத்தை காண்பதாகவும், நீங்கள் மட்டும் உலகத்தின் அத்தனை துயரங்களையும் சுமப்பவர் போலவும் தோன்றுகிறதா? எப்படியேனும் இந்த தருணத்தை சீக்கிரம் கடந்து விட வேண்டும் என மனம் பதைக்கிறதா? உங்களுக்காகத்தான் பம்பாய் படத்தில் "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு.." என்கிற பாடல் இசையமைக்கப்பட்டது. இன்னும் பல ஜென்மங்கள் நீங்கள் அதே இடத்தில் வீற்றிருந்து அவளுக்காக காத்திருக்கும் வலிமையை தரவல்ல பாடல் அது. நீங்கள் மலைமீது தீக்குளிக்க தேவையில்லை. ஏனெனில் ஓர் பார்வை பார்த்தே உயிர்கொண்ட பெண்மை வாராமல் போய்விடுமா என்ன?
காதல் தோல்வியின் பிறகுதான் உள்ளிருந்து ஒரு அற்புத இசை பிறக்குமென்று நம்ப வைக்கப்பட்டான் அவன். அந்த ரணம்தான் உலகின் மிகச்சிறந்த இசையை தரவல்லது என அறிவுறுத்தப்பட்டான். இதன் விளைவாய் காதலிலும் விழுகிறான். இதயம் உடைக்கப்படுகிறான். இப்போது அவனுள் இசையை விட அவள் அதிகமாய் கலந்திருக்கிறாள். ஏனெனில் இசையே அவளாகத்தான் அவனுக்கு தெரிகிறது. எதைப்பற்றிய பிரக்ஞையும் அன்றி அவன் வாழ முற்படுகிறான். அவனின் நேற்று, இன்று, நாளை,வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு,வலம், இடம் என எல்லாமுமாக வியாபித்து நிற்கிறாள் அவள். ஆனால் அவள் அருகிலில்லை. இருக்கவும் இயலாது. அப்போது அவனுள்ளிருந்து புறப்படும் இசை "சட்டா ஹக்..." என்னும் வார்த்தை. ராக் ஸ்டார் ஒருவனின் வாழ்க்கைக் குறிப்பை இசையால் மட்டுந்தானே எழுதமுடியும்? வெறுப்பின் உச்சமாகவும், எதிர்மறை எண்ணங்களின் எழுச்சியாகவும் இருக்கும் இந்தப்பாடலை அதே படத்தின் இன்னொரு பாடல் வெற்றி கொள்கிறது. அது..
"குன் ஃபாயா குன்...". ஆர்மோனியத்தின் அருகில் அமைதியாய் வீற்றிருக்கும் ஒரு கிடார். இறைவனுக்கு முன்பு அமர்ந்திருக்கும் ஒரு வெட்டுண்ட மனது. ஒரு குழுவின் தேவகானம். அந்த குழுவே தேவ தூதர்களோ என சந்தேகிக்க வைக்கும் இசை. பாடல் படைத்தவன் இறைவனாகத்தான் இருக்க வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் முடிவெடுக்கத்தக்க இசை. உறக்கம் இல்லா இரவுகளோ அல்லது உரிமை இல்லா உறவுகளின் கோபத்தின் நேரத்திலோ இதைக் கேளுங்கள்.உலகம் அழகாகும். கண்ணீர் மருந்தாகும்.
இசைக்கு கனவுகளை விரிய வைக்கும் சக்தியுண்டு. ஆனால் கனவிற்கு நிறங்கள் கிடையாது. இசை நிறங்களை வெளிபடுத்துமா? இசையே ஒரு நிறம்தான் என்று கூட சொல்லுவேன். நிறங்களை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு பாடல். ஒவ்வொரு நிறம் பற்றி பாடலில் வருகையிலும் அந்த நிறத்தை உணரவைக்கும் இசை. "பச்சை நிறமே.." என்கிற அலைபாயுதே பாடல். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற ஒருவர் இந்தப் பாடலை பாடிக் கேட்டபோதுதான் நான் இசையை உணர்ந்தேன். எப்படி பாடியவர் தன் கண்களை தாண்டி அந்த நிறங்களை உணர்ந்தாரோ அப்படி! இசைக்கு நிறமில்லையா உண்டா என்கிற முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இந்த சில பாடல்கள் மட்டுமே ஒரு சரித்திரத்தின் முழுவீச்சை உங்களுக்கு சொல்லிவிடாது. இன்று இந்த நொடியில் உங்கள் கால் நனைத்த சில அலைகள் எப்படி அந்த பெருங்கடலின் முழு சரித்திரத்தை, அது தாண்டி வந்த தடைகளின் குரூரத்தை, அது நனைத்துப்போன கால்களின் வரலாற்றை, அதனுள் தொலைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையை சொல்லியிருக்க முடியும்?
அப்படியேதான் இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும். ரகுமான் என்னும் மகாசமுத்திரத்தின் சிற்சில அலைகள்தான் மேற்கண்டவை. என் கால்களை நான் கடற்கரையில் நிற்கும்போதெல்லாம் நனைப்பவை. அதற்கே ஈடுகொடுக்க முடியாமல் திணறும் சாமானியன் நான். கண்ணீர் உகுத்து அடுத்தென்ன என அறியாமல் தவிக்கும் சிறுவனைப்போல் நான் நிற்கையில் என் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக நிற்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை.
என்னோடு கைகோருங்கள். ஒரு சங்கிலித்தொடர் போல அவர் இசைப்பாதையில் பயணித்து இன்புறுவோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் வானுலகம் சென்று சொர்க்கம் காண்போம். இந்த பொழுதில் இவர் தரும் இசையே போதும்.
ஆப்பி பொறந்த டே அல்லா ரக்கா ரகுமான்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com