இளையராஜா குரல் கொடுப்பது யாருக்காக?

  • IndiaGlitz, [Tuesday,March 21 2017]

கட்ந்த சில நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் இளையராஜா-எஸ்பிபி பிரச்சனை குறித்துதான் விவாதித்து வருகின்றனர். ஒரு தனியார் தொலைக்காட்சி இதுகுறித்து நேற்று ஒரு விவாதமே நடத்திவிட்டது. இளையராஜா, எஸ்பிபி இருவருமே திரையுலகில் எந்த அளவுக்கு நேர்மையானவர்கள் என்பதும், இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பதும் கோலிவுட் திரையுலகினர் அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது எழுந்துள்ள இந்த காப்பிரைட் பிரச்சனையால் இருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை ஒருசிலர் வைத்து வருகின்றனர். குறிப்பாக இளையராஜா மீது அவரது சகோதரர் உள்பட பலர் குற்றஞ்சாட்டுவது இந்த பிரச்சனையின் உண்மைத்தன்மை என்னவென்று புரிந்து கொள்ளாமல் செய்யும் விமர்சனம் என்றும், அவர்களுடைய தவறான புரிதலே இதற்கு காரணம் எனவும் அறிய முடிகிறது.

இசைஞானி தற்போது எழுப்பியுள்ள பிரச்சனை ஏதோ அவருக்காக மட்டும் எழுப்பியதாகவும், எஸ்பிபிக்கு எதிராக மட்டும் எழுப்பியதாகவும் ஒருசிலர் குறுகிய மனப்பான்மையுடன் இந்த விஷயத்தை பார்க்கின்றனர். இளையராஜா தனக்கு மட்டுமின்றி தனது சக இசையமைப்பாளர் அனைவருக்கும்தான் இந்த பிரச்சனையை கையாண்டு வருகிறார். அதுவும் நேற்று உடனே முடிவு செய்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது. பல ஆண்டுகளாகவே அவர் மற்ற இசையமைப்பாளர்களுடன் இதுகுறித்து கலந்து ஆலோசித்தே இந்த பிரச்சனையை கையாண்டு வருகிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மெல்லிசைக்குழுவினர் நடத்திய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட இளையராஜா, அந்த கூட்டத்தில் அவர் பேசியதை நினைவு கூர்ந்தால் அவரை பற்றி யாரும் தவறாக விமர்சனம் செய்ய மாட்டார்கள். அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நான் உங்களிடம் பணம் கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எப்போதும் கொடுப்பவன்... கேட்பவன் அல்ல. அது உங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கியவன். இப்போதைக்கு நான் சந்திக்க வந்திருக்கின்ற காரணம் என்னவென்றால், என்னுடைய பாடல்களையோ மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும் போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை.

இதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ். இதை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக் காட்டி அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது. என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேர்வதில்லை. எந்த இசை அமைப்பாளருக்கும் நியாயமாய் சேர வேண்டியவை சென்று சேர்வதில்லை. என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் இசை நிகழ்ச்சியில் உங்கள் பாடல்களைத்தான் எண்பது சதவீதத்திற்கு மேல் பாடுகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு ஐந்து சதவீதமோ பத்து சதவீதமோ கொடுத்து விட்டு அந்த செலவு இந்த செலவு என்று கணக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள் ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகத்தினர். எனக்கே இப்படி என்றால் மற்ற இசையமைப்பாளர்களுக்கு என்ன கொடுப்பார்கள்?

அதே போல் அவர்களிடம் இத்தனையாவது வருடம் வந்த பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளீர்களா? இந்த உறுப்பினரின் பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று விதிமுறை இருக்கிறதா ? இது போன்ற கேள்விகள் எதற்குமே விடை இல்ல. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமாம். என்ன நியாயம் இது ? அதனால் அந்த நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கை இல்லாததால் அந்த அமைப்பிலிருந்து நான் விலகிக் கொள்ள முடிவு செய்து விட்டேன். எவனோ ஒருவன் என் பெயரை சொல்லி பணம் வசூலித்து உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் உங்களிடமே நேரடியாக இதைச் சொல்லி என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன்.

அதே போல் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன். நானும் இதுபோன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி, நாடகத்தின் பின்னணி இசை என்று வாசித்து இசையமைப்பாளனாக வந்ததால் உங்கள் உணர்வுகள் எனக்கு நன்றாகத் தெரியும். கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அமைப்பு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். மற்றவர்களின் பாடல்களுக்கும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் அமர்ந்து பேசி முடிவெடுங்கள். குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள் அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினி மியூசிக் யூனியனுடன் அமர்ந்து பேசியும் முடிவெடுக்கலாம். ஐ.பி.ஆர்.எஸ் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த கூட்டத்தின் மூலம் இந்த பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்வோம். இல்லாவிட்டால் நாமே ஒரு புதிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இப்போதே கூட ஒரு கமிட்டியை போடுங்கள் நாம் ஏன் மற்றவர்களிடம் ஏமாற வேண்டும்? இவ்வாறு இசைஞானி மெல்லிசை கலைஞர்களின் கூட்டத்தில் பேசினார்.

இசைஞானி அவர்களின் இந்த பேச்சை கூர்ந்து கேட்டவர்களுக்கு இந்த பிரச்சனையின் ஆழம் புரிந்திருக்கும்.

இளையராஜா அவருக்காக மட்டும் பேசவில்லை. எத்தனையோ இசைமேதைகளின் குடும்பம் இன்று வறுமையில் வாடுகிறது. ஆனால் அவர்களுடைய இசையை பயன்படுத்துபவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் சம்பாதிக்கும் தொகையில் ராயல்டி என்று ஒரு பகுதியாக அந்த வறுமையான குடும்பத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் இசைஞானியின் உண்மையான நோக்கம். பாபநாசம் சிவன், டி.ஆர்.மகாலிங்கம், ஜி.ராமநாதன், தக்ஷிணா மூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம் சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர்களின் வாரிசுகளுக்கும் பயன் கிடைக்க வேண்டும் என்ற அக்கறையில் தான் இசைஞானி போராடுகிறார்.

இசைஞானியின் இந்த நல்ல எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் அவர் மீது பணத்தாசை பிடித்தவர் என்ற தவறான விமர்சனங்களை அவருக்கு நெருக்கமான உறவினர்களே வைப்பது மிகவும் அபாண்டமானது.

இதற்கு முன் காப்பிரைட் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு இசைக்கலைஞர்களிடம் இல்லாமல் இருந்தது. அதனால் இதுகுறித்த கோரிக்கை எழவில்லை. ஆனால் இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் தங்கள் படைப்பிற்காக அவர்கள் குரல் கொடுப்பது எந்தவித தவறும் இல்லை. நான் தான் பாட்டு எழுதினேன், நான் தான் குரல் கொடுத்தேன் என்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இசை என்பது ஒன்று மாதிரி. மற்றவை எல்லாம் ஜீரோ மாதிரி. ஒன்று இருந்தால் தான் ஜீரோவிற்கு மதிப்பு உண்டு. இல்லாவிட்டால் அது என்றைக்குமே ஜீரோதான்.


எந்த ஒரு படைப்பையும் முழு உரிமை கொண்டாட அந்த படைப்பாளிக்கு உரிமை உண்டு. எனவே எஸ்பிபியே கூறியது போல் இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் பிரச்சனையை சுமூகமாக முடிக்க அனைவரும் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

More News

விவசாயிகளை விட்டுக் கொடுக்க கூடாது. ஜி.வி.பிரகாஷ்

தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 7 நாட்களாக காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

நடிகை ரம்பா விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை

பிரபல நடிகையாக இருந்த ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகள் கனடாவில் செட்டில் ஆகிய நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன...

இது எனது கனவுப்படம் அல்ல. 'காற்று வெளியிடை இசை விழாவில் கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, கார்த்தி, அதிதி, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்...

இளையராஜா-எஸ்பிபி பிரச்சனைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் முதிர்ச்சியான பதில்

கடந்த சில நாட்களாக இசைஞானி இளையாராஜா பாடகர் எஸ்பிபி-க்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. இருவருமே இசைத்துறையில் மேதாவிகள் என்பது மட்டுமின்றி கிட்டத்தட்ட திரையுலகினர் அனைவருக்குமே நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்...

அருள்நிதியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஆறாது சினம்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'பிருந்தாவனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.