துக்கம் காரணமாக இன்று பிறந்த நாளை கொண்டாடவில்லை: இளையராஜா பேட்டி..!
- IndiaGlitz, [Sunday,June 02 2024]
இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த போஸ்டரை வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதேபோல் பல திரை உலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ’இன்று எனது பிறந்தநாள் என்பதால் நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறீர்கள், ஆனால் அதே நேரத்தில் எனது மகளை இழந்த துக்கத்தில் நான் இருப்பதால், இன்று நான் பிறந்த நாளை கொண்டாடவில்லை’ என்று தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி காலமானார் என்பதும் பவதாரணியின் மரணம் இளையராஜாவுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு பெரும் இழப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜா தனது மகள் இறந்த துக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது இன்றைய பேட்டியில் இருந்து தெரிய வருகிறது.