தமிழகத்தில் மே 31க்கு பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கா? முதல்வர் சொல்வது என்ன?
- IndiaGlitz, [Wednesday,May 26 2021]
தமிழகத்தில் மே 31க்குப் பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 18-45 வயதுடைய 2,000 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் தமிழகத்தில் மேலும் தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், கொரோனா ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு 2 வாரத்திற்கு அமல்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் ஒரு வாரத்திற்கு தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்து வருகிறது. இதனால் நிலைமையைப் பொறுத்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.