close
Choose your channels

மனித இனப்பெருக்கத்திற்கும் கோவில் கும்பத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? வரலாற்றுப் பின்னணி என்ன?

Friday, February 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனித இனப்பெருக்கத்திற்கும் கோவில் கும்பத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? வரலாற்றுப் பின்னணி என்ன?

 

கும்பம், பூரணக் கும்பம், கலசம் என்று பல பெயர்களுடன் கோவில் கோபுரத்தில் இருக்கும் கும்பத்தைப் பற்றி நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்து மதத்தின் சடங்கு பொருட்களில் ஒன்று என்பது மட்டுமே.

கும்பம் கோபுரங்களில் மட்டுமல்லாது பல நேரங்களில் பூஜைக்கு பயன்படுத்தப் படுகிறது. திருமண விழாக்களில் நூல் சுற்றப்பட்டு பொது மேடையில் வைக்கப் படுகின்றன. சடங்கு, முக்கிய விழாக்கள், கோவில் காரியங்கள், குடழுமுக்கு, தீட்டுத் தீர்ப்பது முதற்கொண்டு அனைத்து விஷயங்களிலும் கும்பம் முதன்மையான இடம் வகிக்கிறது.

கோவில் கும்பத்தைத் தவிர மற்ற இடங்களில் வைக்கப் படும் கும்பங்களில் நீர் நிரப்பப் படுகின்றன. நீரினை முதன்மை தெய்வமாகக் கொண்ட ஆரிய இனத்தவரின் வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று என்று கூட சில ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றனர். ஆனால் ஆரிய இனத்தில் மட்டுமல்லாது உலகின் பல இனத்து மக்களிடம் இதுபோன்ற பழக்கம் இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினால் விடை தெரியாமல் முழிக்க வேண்டி இருக்கிறது??? காரணம் அடிப்படையில் இது ஒரு பூஜை பொருள் மட்டும் இல்லை, அதற்கு மேல் கும்பம் மதிப்பு மிக்க ஒரு அடையாள குறியீடாக வரலாற்றில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதே.

திருமணச் சடங்கு என்பது ஒரு வளமை (செழிப்பு) சடங்கு. சங்க இலக்கியத் திருமணங்களில் நீர் முதன்மைப் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நல்ல வளமான வாழ்வினை வாழ்ந்த 4 முது பெண்டிர்கள் மணப்பெண்ணின் தலை மீது நீரைத் தெளித்து இருக்கின்றனர். எனவே பண்டை தமிழ் பண்பாட்டிலும் நீர் முதன்மையான இடம் பெற்ற ஒன்று தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. நீர் ஆரிய இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, அனைத்துச் சமூகங்களிலும் நீர் ஏதோ ஒரு காரணத்திற்காக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இன்றைக்கு, ஆன்மீகவாதிகள் நீர் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. அனைத்து உயிர்களின் உருவாக்கத்திற்கும் நீர் தான் முதன்மை காரணம். உலகில் முதல் உயிரினம் கூட நீரில் இருந்து தோற்றம் பெற்றது என விளக்கம் அளிக்கின்றனர். உண்மையில் இந்தக் காரணத்தை ஒப்புக் கொண்டே ஆக வேண்டி இருக்கிறது. ஏனெனில் நீர் தான் உயிரினத்தின் தோற்றத்திற்கு முதன்மை காரணம் ஆகும். கருப்பப்பை நீர் தான் மனித உருவிற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கருப்பப்பை நீரின் குறியீட்டு அடையாளம் தான் கும்பங்களில் நிரப்பப் படுகின்றன. கும்பம் ஒரு வளமையின் (செழிப்பின்) குறியீட்டு வடிவம் என்பதை அதன் முக்கியத்துவத்தில் இருந்தே உணர்ந்து கொள்ள முடிகிறது.

திருமணச் சடங்குகளில் நீரோடு சில நேரங்களில் முளைப்பாலிகள் வைக்கப் பட்டு இருக்கின்றன. கண்ணகிக்கு திருமணம் நடக்கும்போது முளைப்பாலிகள் வைக்கப் பட்டு இருப்பதை சிலப்பதிகாரம் காட்சி படுத்துகிறது. ஏறக்குறைய கி.பி.2 ஆம் நூற்றாண்டில் முளைப்பாலிகள் பயன்படுத்தப் பட்டு இருக்கின்றன. எதற்கு இந்த முளைப் பாலிகள் என்ற அடுத்த கேள்வி எழலாம்.

திருமணமோ, கோவில் கும்பாபிஷேகமோ ஒரு வாரத்திற்கு முன்னர் 9 வகையான தானியங்களைக் கொண்டு ஊற வைத்து இந்த முளைப்பாரிகள், தட்டு, முரம் அல்லது கூடைகளில் வளர்க்கப் படுகின்றன. இந்தத் தானியங்கள் நன்றாக வளர்ந்து செழிப்பாக இருப்பதை ஒரு நல்ல அறிகுறியாகவும் கருதும் வழக்கம் உலகில் பல சமூகங்களில் காணப்படுகிறது. உலகில் பல இடங்களில் இன்றைக்கும் முளைப்பாரிகள் வளர்க்கும் வழக்கம் இருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்கத் தக்க விஷயம்.

சரி, கும்பத்திற்கும் முளைப்பாரிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். இவை இரண்டும் பல நேரங்களில் ஒன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன என்பதோடு இரண்டும் வளமை (செழிப்பின்) யின் அடையாளம் என்பது தான் முக்கியமானது.

கும்பத்தின் வடிவம்

கோவில் கோபுரத்தில் இருக்கும் கும்பம் உருண்டு திரண்டு மேலே கூம்பிய வடிவத்துடன் இருக்கும். அதே போல வீடுகளில் பயன்படுத்தப் படும் கும்பங்களும் உருண்டையாகவே இருக்கின்றன. இந்தக் கும்பங்கள் செம்பு, களி மண், ஐம்பொன் உலோகங்கள், பித்தளை, சில்வர் எனப் பலவகையான மூலப் பொருட்களைக் கொண்டு செய்யப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கும்பம் என்பது அடிப்படையில் ஒரு பெண்ணின் கருப்பப்பையின் வடிவத்தை ஒத்திருக்கிறது. பெண்ணின் கருப்பப்பை அடுத்தத் தலைமுறையினரை உருவாக்கும், மனித இனப்பெருக்கத்தின் செழிப்பினை குறிக்கும் ஒரு வளமை அடையாளம் ஆகும். மனித இனப்பெருக்கத்தின் செழிப்பினைக் குறிக்கத்தான் நமது விழாக்களிலும் கோவில் கோபுரத்திலும் இந்த வடிவம் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் கலசத்தின் வடிவம் கருப்பப் பையின் குறியீடு.

நாம் எந்த ஒரு காரணமும் இல்லாமல் எந்தப் பொருளையும் பயன்படுத்துவது இல்லை. வளமை, செழுமையின் அடையாளத்தை கோவில், விழாக்கள், திருமணங்கள் என்று அனைத்து நேரங்களிலும் நினைவுபடுத்திக் கொண்டே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடுத்த தலைமுறை மனிதர்களுக்கு விட்டுச் செல்கிறோம்.

கோவில் கோபுரங்களில் வைக்கப் படும் கலசங்களில் வரகு, தினை, சாமை, கம்பு போன்ற தானியங்கள் வைக்கப் படுவது உண்டு. பொதுவாக இதற்கான காரணங்களை கேட்கும் போது கும்பம் செம்பு, தங்கம், ஐம்பொன் போன்ற உலோகங்களால் செய்யப் பட்டு இருக்கும். இந்த உலோகங்கள் மின்காந்த அலைகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. சில நேரங்களில் இடி மின்னல் தாக்கக் கூடிய அபாயமும் இருக்கிறது. மின் காந்த அதிர்வுகளை கட்டுப் படுத்தும் ஆற்றல் வரகிற்கு இருப்பதாகவும் அதனால் தான் வரகு கும்பங்களில் பயன்படுத்தப் படுகிறது என்றும் காரணம் கூறப்படுகிறது. மின் காந்த அதிர்வுகள் மட்டும் தான் காரணமா??? இதிலும் நமது முன்னோர்கள் விஷயத்திலும் அறிவாளிகளாகவே இருந்திருக்கின்றனர்.

உண்மையில், கோவில் என்பது ஒரு அரச சாம்ராஜ்யத்தின் முதன்மையான இடம். மன்னர் ஆட்சி ஏற்பட்டதற்கு பின்னரே கோவில் பெருக்கம் அதிகரித்து இருக்கிறது. அதற்கு முன்னர் கோவில் கலாச்சாரம் இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது. பண்டைய நாகரிகங்களில் பூகம்பம், சூறாவளி போன்ற நேரங்களில் மக்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கும். அத்தகைய சூழல்களில் உணவு தானியங்களை விளைவிக்கக் கூட தானியங்கள் இல்லாமல் போயிருக்கக் கூடும். இத்தகைய நிலைமையைத் தவிர்ப்பதற்கு கும்பங்களில் உணவு தானியங்களை நிரப்பி வைக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கும் என மானிடவியல் (Anthropology) ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டி உள்ளனர்.


வரகுக்கு மின் காந்த அதிர்வுகளை தடுக்கும் சக்தி இருக்கிறது என்பதும் உண்மைதான். வறட்சி காலத்திலும் வளரக் கூடிய ஒரே பயிர் வரகு. சுமார் 1000 வருடங்களைத் தாண்டியும் அதன் விதைகள் முளைக்கக் கூடிய தன்மையை பெற்றிருக்கின்றன. இந்தக் காரணத்தைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை புரியும். எவ்வளவு முன்னெச்சரிக்கை உடையவர்களாக இருந்திருந்தால் தமிழ் மன்னர்கள் கோவில் கலசங்களில் விதைப் பொருட்களை வைக்க வேண்டு எனச் சிந்தித்து இருப்பார்கள்??? சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவின் போது கலசத்தில் வரகு தானியங்கள் புதியதாக மாற்றப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது.


உலக அளவில் கும்பம் போன்ற குறியீட்டை நாம் மட்டுமே பயன்படுத்துகிறோமா??? வேறு யாரும் இத்தகைய குறியீட்டைப் பயன் படுத்த வில்லையா??? என்ற கேள்வி அடுத்த கேள்வி இன்னும் சுவாரசியத்தை கொடுக்கலாம்.
ஹாவுலிட் படமான ’‘ டாவின்சி கோட்’’ படத்தில் ஆண்-பெண்ணின் அடையாளம் “Blade and Chalice” பற்றிய குறிப்புகளைப் பயன்படுத்தி இருப்பார்கள். உலக முழுக்க ஆதி இன மக்கள் ஆண்/பெண்ணிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப் பட்ட ஒரு குறியீடாக ஐந்து முகத்தைக் கொண்ட நட்சத்திர முத்திரையை (Pentagram) காட்டி இருப்பர். இந்த ஐந்து முக நட்சத்திரக் குறியீடு தற்போது பல ஹாலிவுட் படங்களில் சாத்தானை (Pentacle) குறிப்பதைப் போலவும் திகிலை ஊட்டுவதாகவும் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

உண்மையில் ஐந்து முகம் கொண்ட நட்சத்திர முத்திரை (Pentagram) காலந்தோறும் சாத்தானின் அடையாளமாகத் தான் இருந்ததா??? இந்தக் கேள்வி, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெண் தெய்வ வழிபாடு இருந்த ஒரு சமூகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கிறிஸ்துவத்தின் தோற்றத்திற்கு முன்னரே அன்றைய ஐரோப்பாவில் பல இனங்கள் இந்த முத்திரையை வழிபட்டு இருக்கின்றனர்.

உலகில் பல இனங்கள் பெண்ணை கடவுளாக வழிபட்ட காலக் கட்டங்களைத் தாண்டியே வந்து இருக்கின்றன. கிறிஸ்துவ மதம் தோன்றுவதற்கு முன்னர் ரோம் முழுவதும் பெண் தெய்வமே வழிபட பட்டது என்பதை Davincy code படத்திலும் காட்டி இருப்பார்கள். கிறிஸ்துவின் மனைவி மரியாவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப் பட்டு இருந்தது. அதை பின்னால் வந்த கிறிஸ்துவர்கள் ஏற்றுக் கொள்ள தயங்கினர் என்பதையே இந்தப் படம் கதைக் கருவாகக் கொண்டிருந்தது. படத்தின் உண்மைத் தன்மையை விட்டு விட்டு அவர்கள் சொல்லும் “Blade and Chalice” என்ற குறியீட்டின் விளக்கம் தான் உலகில் அனைவரது கவனத்தை கவர்ந்த விஷயமாக இருந்தது.

“Blade” என்பது ஆணின் பிறப்பு உறுப்பினைக் குறிக்கும் மதிப்பு மிக்க அடையாளமாகவும், “Chalice” என்பது பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் கருப்பப்பையை குறிக்கும், ஆணிற்குச் சம அந்தஸ்தைப் பெற்ற குறியீடாகவும் இருந்திருக்கிறது. ஆண்/பெண் கலந்த ஒரு வகையான கூடலில் பண்டைய பேகன் இனத்தவர் கடவுளை கொண்டாடியதாகவும் வரலாறு உண்டு. நமது இந்தியத் தத்துவத்தில் ஒன்றான தாந்திரீகம் கூட ஆண் பெண் கலவையை உயர்ந்த மதிப்புடையதாக இருந்தது குறிப்பிடத் தக்கது.


இரு அளவுகளும் சமமாக இணைந்த ஐந்து முகம் கொண்ட நட்சத்திரம் (Pentagram) மன்னர்கள் ஆண்ட காலத்தில் நம்பிக்கை சின்னமாகக் கருதப் பட்டிருக்கிறது. எதிரிகள் நாலாபுறத்தில் இருந்து வருவதாகவும் அவர்களை எதிர்ப்பதற்கு ஐம்பூதங்களான பஞ்சபூதங்கள் மன்னரின் ஆன்மாவோடு துணை நின்று எதிர்த்து நிற்கும் என்றும் நம்ப பட்டு இருக்கிறது. கணிதவியல் அறிஞரான பித்தாகரஸ் இந்தச் சின்னத்தை முழுமையின் அடையாளமாகவே கருதியிருக்கிறார்.

ஒவ்வொரு சின்னத்தின் அர்த்தமும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்றைக்கு வளமையின் அடையாளமாக அனைத்து விஷயங்களில் பயன்படுத்தப் பட்ட கும்பம் (கலசம்) இன்றைக்கு வெறுமனே மதச் சடங்காக மாறி உள்ளது. அர்த்த நிலைமைகளும் மாறிவிட்டன. ஆனால், ஆதி மனிதன் எப்போதும் தனது உயிர் வாழ்க்கையை உறுதி செய்து கொள்ளும் விதத்தில் தான் அனைத்துக் குறியீடுகளையும் பயன்படுத்தி இருக்கிறான் என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது. குறியீடுகள், பழக்க வழக்கங்கள் ஒரு பழைய வரலாற்றின் எச்சமாகவே தொடரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment