தமிழக அரசின் கேளிக்கை வரி ஜிஎஸ்டியில் அடங்குமா? தெளிவுபடுத்த விஷால் கோரிக்கை
- IndiaGlitz, [Saturday,July 01 2017]
இன்று முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைக்கு வந்த போதிலும் திரைத்துறையை பொறுத்தவரை மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரண்டு வரிகள் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். இதன்படி "பிராந்திய மொழி சினிமாக்களை குறைந்த ஜிஎஸ்டி வரம்பில் வைக்கும்படி மத்திய அரசிடம் கூட்டாக ஒரு விண்ணப்பத்தை முன்வைத்துள்ளோம்.
தற்போது வசூலிக்கப்படும் கேளிக்கை வரியும் ஜிஎஸ்டியில் அடங்குமா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்துக்கான ஜிஎஸ்டி வேறா என்பதையும் தமிழக அரசே தெளிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசின் கேளிக்கை வரியைக் குறைக்க முதல்வர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.