உடலுறவின் போது கொரோனா பரவ வாய்ப்புள்ளதா..? தம்பதிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?
- IndiaGlitz, [Saturday,May 22 2021]
கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், ஊரடங்கு சமயத்தில் தம்பதிகளுக்குள் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. வேலைப்பளு, தொற்று பாதிப்பு காரணமாகவும் பலரும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தம்பதிகள் உடலுறவில் பின்பற்ற விஷயங்கள் குறித்து இதில் காண்போம்.
ஒருசிலர் பணி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் சென்றிருப்பார்கள். அப்படி வெளியில் சென்று வீடு திரும்பும் ஆண் (அ) பெண் யாராக இருந்தாலும் சரி, சில நாட்கள் தங்களை தனிப்படுத்திக்கொள்வது அவசியமாகும். இக்கடுமையான சூழலில் துணையுடன் உடலுறவை தவிர்ப்பது நல்லது.
1.கொரோனா காலத்தில் பெரும்பாலும் தம்பதிகள் சுற்றுலா போன்ற வெளியிடங்களுக்கு செல்வதில்லை. இருப்பினும் ஹோட்டல்கள் மற்றும் ரெசார்ட் உள்ளிட்டவற்றில் தங்கி, உடலுறவு வைத்துக் கொள்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
2.காதலர்கள் மற்றும் தம்பதிகள் வெவ்வேறு இடங்களில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள். அவர்கள் அதிகம் பயணம் செய்பவராகவோ, அதிக நபர்களை சந்திக்கும் நபராகவோ இருந்தால் உங்கள் துணையை சிறிது நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க சொல்லுங்கள். தனிமைப்படுத்திய நாட்கள் முடிந்தவுடன் துணையுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.
3.முன்பின் அறியாதவர்கள், பாலியல் தொழிலாளிகள் உள்ளிட்டவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது நல்லதல்ல. இந்த தொற்று காலத்தில் தெரியாதவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் போது, பாலியல் நோய், கொரோனா ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. காரணம் அவர்களுக்கு தொற்று பாதிப்பு உள்ளதா என்பது நமக்கு தெரியாது.
4.பொதுவாகவே மூக்கு, கைகள், வாய் வழியாக கொரோனா பரவுகிறது என்ற செய்திகள் நமக்கு தெரிந்ததே. அதே போல் உடலுறவின் போது உடல்கள் தொடுவதாலும், நெருக்கமாக மூச்சுக் காற்று விடுவதன் மூலமும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. ஒருவேளை துணைக்கு கொரோனா இருக்குமா என்ற சந்தேகம் இருப்பின், தம்பதிகளை முகக்கவசம் அணிந்து உடலுறவு கொள்ளுமாறு மேற்கத்திய நாடுகளில் கூறப்படுகிறது. இல்லையெனில் உடலுறவின் போது, காண்டம் அணிந்து கொள்ளவும், உடலுறவிற்குப் பின் 20 வினாடிகள் தொடர்ந்து கைகளை சுத்தம் செய்யவும் பரிந்துரை செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் சுய இன்பம் செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.