கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் ஸ்ருதிஹாசன்? அவரே அளித்த பதில்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் தவிர மற்ற நடிகர் நடிகைகளின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வந்த தகவலின்படி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதிஹாசன் ’அப்பா கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை’ என்று கூறினார். மேலும் ’தனது சகோதரி அக்சராஹாசன் படம் இயக்குவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவரது இயக்கத்தில் எனக்கு ஏற்ற கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.