ரஜினி அரசியலுக்கு வரவில்லையா? வைரலாகும் கடிதத்தால் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,October 29 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, தான் உறுதியாக அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆன்மிக அரசியலை தொடங்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதமொன்று வைரலாகி வருகிறது. அதில் தான் அரசியலுக்கு வரவில்லை என்பது போல் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் காரணத்தால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் தனக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தற்போதைக்கு அரசியல் வேண்டாம் என்று உடல்நலம் கருதி அறிவுறுத்தி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்போதைக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்பதுபோல் செய்திகள் ஊடகங்களில் பரவி வருகிறது.
ஆனால் இது குறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது இந்த கடிதம் எதிர்க்கட்சியினரின் ஐடி விங் செய்த சதி என்றும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட போலியான கடிதம் இது என்றும் கூறி உள்ளனர்.
ஆனால் இது போலியான கடிதமாக இருந்தாலும் ரஜினி தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு வரவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.