'பாகுபலி' படங்களின் மாஸ் காட்சிகளுக்கு 'பவர்ஸ்டார் காரணமா? புதிய தகவல்
- IndiaGlitz, [Saturday,May 06 2017]
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கிவிட்டது. ரூ.1000 கோடி கிளப்பில் இணையும் முதல் இந்திய படம் என்ற பெருமையை இந்த படம் இன்னும் ஓரிரு நாட்களில் அடையவுள்ளது.
இந்த நிலையில் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் உள்ள மாஸ் காட்சிகளுக்கு பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரே காரணம் என இந்த படத்தின் கதாசிரியரும், எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாகுபலியின் முதல் பாகத்தில் வில்லன் பல்வாள்தேவனின் மிகப்பெரிய சிலை ஒன்று கீழே விழும்போது அதை தாங்கிப்பிடிக்கும் மகேந்திர பாகுபலியை பார்த்து பொதுமக்கள் 'பாகுபலி...பாகுபலி என்று உணர்ச்சிப்பெருக்கில் குரல் கொடுப்பார்கள். அதேபோல் 'பாகுபலி 2' படத்திலும் மகிழ்மதி அரசின் சேனாதிபதியாக அமரேந்திர பாகுபலி பொறுப்பேற்கும்பொது பொதுமக்கள், வீரர்கள் அனைவரும் உணர்ச்சிப்பெருக்கால் பாகுபலி ..பாகுபலி என்று உரக்க குரல் கொடுப்பதோடு மைதானமே அதிரும் வகையில் போர்க்கருவிகளையும் தரையில் தட்டுவார்கள். இந்த இரண்டு மாஸ் காட்சிகளும் தனது மனதில் தோன்ற பவர்ஸ்டார் பவன்கல்யாண் தான் காரணம் என்று விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஒரு தெலுங்கு படத்தின் ஆடியோ விழாவில் விஜயேந்திர பிரசாத் கலந்து கொண்டிருந்தபோது அந்த விழாவில் பவன்கல்யாண் அறிமுகம் செய்யப்பட்டபோது அவரது ரசிகர்கள் பவர்ஸ்டார்...பவர்ஸ்டார் என்று உரக்க குரல் கொடுத்ததாகவும், அப்போது அந்த அரங்கமே அதிர்ந்ததாகவும், இந்த சம்பவத்தை மனதில் வைத்துதான் பாகுபலி மாஸ் காட்சியை அமைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.