ஓபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பா? நிர்மலா சீதாராமன் டுவீட்டால் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,July 24 2018]
தமிழக துணை முதல்வர் இன்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒருசில அமைச்சர்களை சந்திக்கவிருப்பதாக இன்று காலை செய்தி வெளிவந்தது. இதனையடுத்து சற்றுமுன்னர் ஓபிஎஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'எனது டெல்லி பயணம், அரசியல் பயணம் இல்லை என்றும் எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்றும் கூறியிருந்தார்
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் அவர்களின் பாதுகாப்பு துறை அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் ஒரு டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 'அதிமுக எம்.பி மைத்ரேயனை சந்திக்கவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறியுள்ள நிலையில் அவரை நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என்று டுவீட் வெளிவந்திருப்பதால் அதிமுகவினர் உள்பட தமிழக மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.