விஜயகாந்தை சந்தித்த மு.க.ஸ்டாலின்! கூட்டணியில் திருப்பமா?
- IndiaGlitz, [Friday,February 22 2019]
அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துவிட்ட நிலையில் தற்போது ஒருசில சிறிய கட்சிகளுடன் இரு அணி தலைவர்களும் அடுத்தகட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக எந்த அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் தருவதாக கூறியும் தேமுதிக ஒப்புக்கொள்ளவில்லை என்றும் 7 தொகுதிகள் கேட்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது
இந்த நிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை நேற்று திருநாவுக்கரசரும் இன்று காலை ரஜினியும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த நிலையில் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கூறியபோது, 'விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியுள்ளார். நாங்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். தலைவர் கருணாநிதி மீது அன்பும் பாசமும் பக்தியும் கொண்டிருந்தார். அவரின் மறைவின்போது விஜயகாந்த் வெளிநாட்டில் இருந்தார். அப்போது, வீடியோ மூலமாக விஜயகாந்த் இரங்கல் செய்தியை சொன்னபோது தாங்க முடியாத சோகத்தில் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மனதில் நிழலாடுகிறது.
அதற்கு பின்னர் சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு நேரடியாக கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன்மூலம் அவர் மீது விஜயகாந்த் எந்தளவுக்கு பக்தி வைத்திருந்தார் என்பது புரியும். இப்போது சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி வந்திருக்கிறார். இன்னும் உடல்நிலை முன்னேறி நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் அவர் பணியாற்றிட வாழ்த்துகள் தெரிவித்தேன் என, ஸ்டாலின் தெரிவித்தார்.
விஜயகாந்த் சென்னை திரும்பி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவரை தேடி அரசியல் தலைவர்கள் உடல்நலம் விசாரிப்பதை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.