ரோஜா படத்தை இயக்குகிறாரா மணிரத்னம்? பிரல ஹீரோவிடம் பேச்சுவார்த்தை!

தமிழில் பிரபல இயக்குனராக இருந்த மணிரத்தினம் அவர்களை இந்திய அளவில் புகழ் பெற வைத்த திரைப்படம் ’ரோஜா’ என்றால் அது மிகையாகாது. ‘ரோஜா’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது என்பதும் தெரிந்ததே. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தாலும் படப்பிடிப்பு நடத்த கடுமையான நிபந்தனைகள் இருக்கும் என்று கூறப்படுவதால், இந்தப் படத்தில் ஒரே காட்சியில் நூற்றுக்கணக்கான நடிகர்கள் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு8 அனுமதி கிடைக்குமா? என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த இடைவெளியில் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருப்பதாகவும் அந்த படம்தான் ’ரோஜா 2’ என்றும் கூறப்படுகிறது. ’ரோஜா’ படத்தில் நடித்த அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் ‘ரோஜா 2’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தாலும் இந்த படத்தின் நாயகனாக நடிக்க துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ’ஓகே கண்மணி’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது