கொரோனா பரவாமல் தடுக்க துப்பட்டா, கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது சரியா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாதுகாப்புகள் குறித்த எச்சரிக்கைகளும் அதிகரித்துள்ளன. இதன்படி எந்தவகையான மாஸ்க்கை அணியவேண்டும்? மாஸ்க்குகள் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்குமா? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? சானிடைஸர்களில் எவ்வளவு ஆல்கஹால் கலந்து இருக்கவேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
பொதுவாக, முகமூடிகளில் இரண்டு வகைகள் உண்டு. அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தும் (Surgical Masks) முகமூடி, மற்றொன்று N95 (Respirators) சுவாசக் கருவி. இரண்டுதான் வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள பயன்படுத்தும் முக்கிய சாதனமாக இருக்கிறது.
அறுவைச் சிகிச்சை முகமூடி (Surgical Masks )
இந்த முகமூடிகள் வாய், மூக்கு, கன்னம் ஆகியவற்றை மறைக்கும் விதத்தில் தளர்வாக இருக்கும். மற்றவர்களிடம் இருந்து பரவும் நீர்த்துளி தெறிக்கும்போதோ அல்லது பரவும் போதோ அதில் இருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்ள இந்த அறுவைச் சிகிச்சை முகமூடிகள் உதவுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும் வகையில் இது அமைக்கப்பட்டு இருக்கிறது. சில மடிப்புகள், முக்கோணம், செவ்வகம் என இதன் வடிவமைப்பு மாறுபடுகிறது. அதன் கயிறுகள் காதுகளில் மாட்டுவது போலவோ அல்லது தலையில் கட்டுவது போலவோ அமைந்திருக்கும்.
N95 சுவாசக் கருவி (Respirators)
அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் முகமூடிகளைப் போன்று தளர்வாக இல்லாமல் மிகவும் இறுக்கமான சுவாசக் கருவியாக இது செயல்படுகிறது. நீர்த்துளிகள் முதற்கொண்டு சிறிய துகள் வரைக்கும் 95% வரை காற்றில் உள்ள அனைத்தையையும் வடிகட்டி விடுகிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் முதற்கொண்டு அனைத்தையும் அண்டவிடாமல் பார்த்துக்கொள்ள இந்த வகை முகமூடிகள் உதவுகின்றன. வட்டம் அல்லது முக்கோண வடிவங்களில் இந்த மாஸ்க்குகள் உருவாக்கப்படுகின்றன. இந்த மாஸ்க்குகள் மிகவும் இறுக்கமான தன்மையுடன் இருப்பதால் அணிவதற்கு முன்பு நமக்கு பொருந்துமா என்பதையும் சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும். பொருந்தவில்லை என்றால் வேறு வடிவத்தை தேர்வு செய்யலாம். எந்த மாஸ்க்குகளை வாங்கினாலும் அதில் மருத்துவ முத்திரை இடப்பட்டு இருக்கிறதா என்பதையும் சரிப்பார்த்துக்கொள்ள வேண்டும்.
துணி வகைகளில் பயன்படுத்தும் முகமூடிகள்
துப்பட்டாவை கட்டிக்கொள்வது, கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது, கோணிப்பை முதற்கொண்டு நம்மவர்கள் தயாரிக்கும் முகமூடிகள் எப்போதும் வித்தியாசமாகவே இருக்கிறது. ஆனால் இந்த முகமூடிகள் மிக விரைவில் ஈரப்பதத்திற்கு வந்துவிடும் தன்மைக் கொண்டவை. தவிர்க்க முடியாத சூழலில் இந்த வகையான துணிகளைப் பயன்படுத்தலாம் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தாலும் இது வைரஸ் கிருமிகளிடம் இருந்து 50% பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது. எனவே இத்தகைய துணி வகைகளை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும்.
முகமூடிகள் கொரோனாவிடம் இருந்து நம்மைக் காக்குமா???
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து இந்த முகமூடிகள் நம்மை பாதுகாக்குமா என்பது குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றன. பொதுவாக கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ் தொற்றில் இருந்து மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் தும்மும்போது, அல்லது இருமும்போது நோய் கிருமிகள் மற்றவர்களைத் தொற்றிக்கொள்கிறது. இதில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரே வழி முகமூடிகள் மற்றும் விலகி இருத்தல்.
மேலும், பொருட்கள் மீதும் கொரோனா வைரஸ் கிருமிகள் தங்கியிருக்கும் தன்மைக்கொண்டவை. எனவே அந்தப்பொருட்களைத் தொட்டுவிட்டு முகத்தில் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளைத் தொட்டால் கொரோனா நம்மை தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. எனவே சுவாச மண்டலங்களைத் தாக்காத வகையில் இந்த முகமூடிகள் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அறுவை சிகிச்சை முகமூடிகளில் தளர்வு இருப்பதோடு சுவாசக் காற்று பக்கவாட்டில் வெளியேறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இதிலும் கவனம் தேவைப்படுகிறது. N95 சுவாசக் கருவி (Respirators) மிகவும் இறுக்கமானத் தன்மையுடன் நம்மை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும் என்றாலும் இதன் இறுக்கமான தன்மையால் பலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். அதிக நேரம் அணிவதற்கு முடியாமல் சிலருக்கு மயக்கம் வருதவற்கும் வாய்ப்பு உண்டு. எனவே ஒருவரின் வயது சுவாசிக்கும் தன்மைப் பொருத்து முகமூடிகளைத் தேர்வு செய்யலாம். ஒருவேளை அதிகம் பாதிப்புள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது N95 சுவாசக் கருவி (Respirators) அணிந்துகொள்வது நலம். நோய்த்தொற்றில் இருந்து முழுவதுமாக காக்கும் தன்மை இந்த முகமூடிக்குத்தான் இருக்கிறது.
முகமூடிகளை எப்படி பயன்படுத்த வேண்டும்???
முகமூடிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு கைகளை ஆல்கஹால் கொண்ட சோப்பு அல்லது கிருமிநாசினி பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்துகொள்ளவேண்டும். முக மூடியை வாய் மற்றும் மூக்கை மூடியபடி அணிந்து கொள்ளும்போது இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முகமூடி அணிந்துகொண்டவுடன் அதைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை முகமூடியைத் தொட்டுவிட்டால் கைகளை உடனே சுத்தம் செய்ய வேண்டும். முகமூடி நனைந்துவிட்டால் உடனே அதை மாற்றிவிட வேண்டும். மேலும் அகற்றும்போது முன்னால் கைகளை வைத்து முகமூடியைத் தொடக்கூடாது. காதுகளில் மாட்டப்பட்டு இருக்கும் கயிறுகளை விலக்கி அதை மூடிப்போட்ட குப்பைத் தொட்டிகளில் போட்டு விட வேண்டும். மேலும், முகமூடிகளை அப்புறப்படுத்தும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout