அசைவ உணவுமுறையால் கொரோனா வைரஸ் தொற்று பரவியதா??? விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவிய தருணத்தில் இருந்தே அவர்களின் உணவு முறை பற்றி விவாதம் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வௌவால்களிடம் இருந்து எறும்புத்திண்ணிக்கு பரவி அடுத்து மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் விதத்தில் பரிணாமம் பெற்றிருக்கலாம் என்ற ஆய்வு முடிவுகளும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உணவு முறையில் மாற்றங்கள் தேவை என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த மாதத்தில் காட்டு விலங்குகளின் விற்பனைக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும் மற்றும் இறைச்சிக் கூடங்களின் நெருக்கமான சூழலை மாற்றியமைக்க வேண்டும் என உலகச்சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது. இத்தகைய விவாதங்களினால் வைரஸ் பரவலுக்கும் மனிதர்களின் அசைவ உணவு பழக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைக் குறித்து பொது மக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், மனிதர்களை பாதிக்கின்ற பெரும்பாலான நோய்த்தொற்றுகள் விலங்குகளிடம் இருந்து பரவுகிறது என்பதாலும் இத்தகைய சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.
மனிதர்களை பாதிக்கிற மூன்றில் இரண்டு பங்கு நோய்களுக்கு விலங்குகளே காரணமாக இருக்கிறது. இந்த நோய்த்தொற்றுகள் (Zoonotic Disease) விலங்குவழி நோய்கள் எனவும் குறிப்பிடப் படுகிறது. இத்தகைய 1,415 நோய்க்கிருமிகள் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டள்ளன. இந்த நோய்க்கிருமிகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு கிருமிகள் மனிதர்களுக்கு நோய்களையும் வரவழைத்து விடுகிறது. எய்ட்ஸ் குரங்கிடம் இருந்து பரவியது. மெர்ஸ் ஒட்டகத்திடம் இருந்து பரவியது. சார்ஸ், எபோலா, கொரோனா போன்ற நோய்கள் போன்று இன்னும் பல நோய்களுக்கு வௌவால்கள் கூடாரமாக அமைந்திருக்கிறது.
இதுபோன்ற பாதிப்புகளால்தான் உணவுமுறை பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும் விஞ்ஞானிகள் அசைவ உணவு முறைகளே தவறு எனக் கூறமுடியாது. தடைசெய்யப்பட்ட விலங்குகளின் இறைச்சிகளை சாதாரணமாக புழங்குவதும் விற்பனை செய்வதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். அதாவது தடை செய்யப்பட்ட வௌவால், எறும்புத்திண்ணி, முதலை, ஆமை போன்ற காட்டு விலங்குகள் சாதாரணமாக விற்பனை செய்வதற்கும் உண்பதற்கும் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில நாடுகளில் இந்த உணவுகளை விரும்பி உண்ணத்தான் செய்கின்றனர்.
இப்படி தடை செய்யப்பட்ட உணவுகள் சந்தைக்கு வரும்போது ஒரு உயிரினத்தின் கழிவுகள் மற்ற விலங்குகளுக்குப் பரவி அது கடைசியில் மனிதர்களிடம் சென்று நோயை உண்டுபண்ணும் அளவிற்கு பரிணாமத்தை அடைந்து விடுகிறது. கொரோனா விஷயத்திலும் இதே கதைதான். வௌவால் பல நோய்களின் கூடாரமாக இருந்தாலும் அதன் நோய்கிருமிகள் வெளவாலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலங்களை வைத்திருக்கிறது. ஆனால் மனிதர்கள் செய்யும் சில விஷமத்தனமான காரியங்களே விலங்குகளை பாதிப்பு கொண்டவையாக மாற்றி விடுகிறது. உதாரணமாக வெளவாலில் கொரோனா வைரஸ் இருந்த வரைக்கும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சீனாவின் இறைச்சிக் கூடத்தில் வைத்து அதன் கழிவுகள் எறும்புத் திண்ணிகளுக்கு செல்லுமாறு நெருக்கமான சூழலை ஏற்படுத்தியதுதான் இங்கு பிரச்சனை. விலங்குகள் வாழவேண்டிய இடம். காடு. அதை வீட்டிற்கு கொண்டு வர நினைப்பதுதான் தவறு எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
வங்க தேசத்தில் நிபா வைரஸ் பரவலிலும் இதே கதைதான். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வௌவால்கள் அங்குள்ள பேரிச்சை மரங்களில் உணவைத் தேடி திரிந்தன. ஆனால் முதன் முறையாக பேரிச்சை மரங்களில் கள் இறக்கச் சென்ற மனிதர்களின் செயலால் இறக்கப்பட்ட கள்ளில் வௌவாலின் கழிவுகள் பட்டு அதன் மூலம் நிபா வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மலேசியாவில் 1998 இல் பரவிய நிபா வைரஸ் இதே போன்ற ஒன்றுதான். அங்குள்ள காட்டை அழித்து விளை நிலங்களாகப் பயன்படுத்தப்பட்ட போது அங்கு சுற்றித்திரிந்த வௌவால்களின் கழிவுகளால் ஒரு விவசாயிக்கு நிபா வைரஸ் நோய்த்தொற்று பரவியது. அவர் மூலம் பல நூறு பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரை இழந்தனர். காடு காடாகவே இருக்கும் வரையில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காட்டிற்கும் அதாவது விலங்குகளுக்கும் மனிதர்களும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும்போது பெரும்பாலும் இதுபோன்ற பிரச்சனை இல்லாமல் இருந்தது. தற்போது காடழிப்பு, நாகரிக சமூகக் கட்டமைப்பு என மனிதன் இயற்கையை அழித்து விலங்குகளின் வாழ்விடத்தை சிதைத்து விடுகிறான். விலங்குகளுக்கு வாழ்விடம் இல்லாமல் ஆக்கப்படும்போது அவை மனிதர்களிடம் நெருக்கமாக வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. சரி, மனிதர்களின் இருப்பிடத்திற்கு வந்ததோடு நிறுத்திக்கொண்டால் கூட பரவாயில்லை. அதை விற்பனை செய்கிறேன் என்ற பேர்வழியில் இறைச்சிக் கூடங்களில் நெருக்கமாக அவற்றை வைப்பதால் மேலும் பிரச்சனை அதிகமாகிறது.
வௌவால்கள் போன்று நோய்க்கிருமிகளை கொண்ட விலங்கினங்கள் மனிதர்கள் தோன்றியதில் இருந்து வாழ்ந்து கொண்டு வருகின்றன. அவற்றின் இருப்பிடத்தை நெருங்காமல், இயற்கையை பராமரித்தாலே மனிதர்கள் தேவையில்லாத நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments