லெபனான் போன்று சென்னைக்கும் ஆபத்தா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர். பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் 6 ஆண்டுக்கும் மேலாக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்து இருந்தார். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால் பெய்ரூட் தலைநகரம் முழுவதும் ஆரஞ்சு வண்ணமாக மாறியதாகவும் இதனால் 138 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பலர் மாயமாகி இருப்பதாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லெபனான் போன்று தற்போது சென்னைக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தை சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முறைகேடான வகையில் இறக்குமதி செய்யப்பட்ட 750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல் நிறுவனம் அனுமதியின்றி இறக்குமதி செய்ததாக வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்மோனியம் நைட்ரேட் 37 கண்டெய்னர்களில் இன்னும் வைக்கப்பட்டு இருப்பதால் தற்போது சில சமூகநல ஆர்வலர்கள் அதுகுறித்து அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அம்மோனியம் நைட்ரேட் குறித்த வழக்கு விசாரணையில் அதை ஏலம் விடுவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. குறைந்த அளவில் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்ட நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மணலி அடுத்த சுங்கத்துறைக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டவுடன் தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து செய்தியும் வெளியிட்டுள்ளனர். அதில் பாதுகாப்பான முறையில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சுங்கத்துறைக்குச் சொந்தமான இடத்தைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு உரிய பாதுகாப்புடன் நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments