வங்கி லாக்கர்களை கைப்பற்ற மத்திய அரசு திட்டமா?

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் மீளவில்லை. பழைய நோட்டுக்களை ஒரு சில ஆயிரம் வைத்துள்ளவர் முதல் பலகோடி வைத்துள்ளவர்கள் வரை படும் துன்பங்கள் சொல்லி மாளாது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இன்னொரு வதந்தி பரவி வருகிறது. அதுதான் வங்கி லாக்கர்களை மத்திய அரசு பறிமுதல் செய்யபோவதாக பரவி வரும் வதந்தி. இந்த வதந்தியால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சகம் வாடிக்கையாளர்களின் வங்கி லாக்கர்'களை பறிமுதல் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் லாக்கர்களை பறிமுதல் செய்யப்போவதாக பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. சிலர் சமூக ஊடகங்களில் திட்டமிட்டே இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். அதேபோல் ரூ.50, ரூ.100 மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்ற வதந்தியையும் நம்பவேண்டாம். இதுபோன்ற அறிவிப்பு இப்போதைக்கு வர வாய்ப்பே இல்லை' என்று உறுதிபட கூறியுள்ளது.
மேலும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற யாருக்ம் உதவ வேண்டாம். அவைகளை மாற்றுவதற்காக புதிய நண்பர்கள் யாரையும் வாடிக்கையாளர்கள் கூட்டு சேர்த்துக் கொள்ளவேண்டாம். கருப்பு பணம் என்பது மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகும். மக்கள் அனைவரும் உதவி செய்யாதவரை கருப்பு பணத்தை ஒழிப்பது கடினம். அதற்கான நடவடிக்கைகளும் வெற்றி பெறாது. மனசாட்சியுள்ள நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசுக்கு உதவிட முன்வரவேண்டும். இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.