மது கொரோனாவுக்கு நல்லதா???
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி 3 பேர் பாதிப்பு என்ற அளவில் இருந்த எண்ணிக்கை இன்றைக்கு 1,200 ஐ தாண்டி சென்றிருக்கிறது. எனவே பலரும் கொரோனா பற்றிய அச்சத்தில் உறைந்து காணப்படுகின்றனர். இந்நிலையில் சமூக வலைத் தளங்களில் வரும் அனைத்துத் தகவல்களையும் உண்மையா என்று பரிசோதிக்கும் மனநிலையும் மக்களுக்கு வந்துவிடுகிறது. மது அருந்தினால் கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற வதந்தி இன்று உலகம் முழுவதும் காணப்படுகிறது. எனவே குடிமகன்கள் எப்படியாவது மது அருந்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சில விபரீதங்களிலும் மாட்டிக்கொள்கின்றனர்.
தற்போது, உலக சுகாதார நிறுவனம் இத்தகவலை மறுத்து இருக்கிறது. உடல் முழுவதும் ஆல்கஹால் அல்லது குளோரின் தெளித்தால் கூட ஏற்கனவே உடலில் நுழைந்த வைரஸ்களை ஒன்றும் செய்யமுடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என WHO கேட்டுக்கொண்டுள்ளது.
மது அருந்தினால் கொரோனா வைரஸ் உடலில் பரவாது. உடல் முழுவதும் குளோரின் மற்றும் ஆல்கஹாலைத் தெளித்துக்கொண்டால் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் போன்ற தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது. குளோரின் வைரஸ் கிருமிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறந்த கிருமிநாசினி. ஆனால் பாதுகாப்பான வழிமுறைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் உடல் முழுவதும், உடை என அனைத்து இடங்களிலும் குளோரினைத் தெளித்தால் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு அவதிப்படும் நிலைமையும் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
பொருட்களின் மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் தங்கியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் கிருமிநானிசி கொண்டு சுத்தப்படுத்துவது அவசியம். அதற்காக ஆல்கஹாலை குடித்தால் நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் WHO கேட்டுக்கொண்டுள்ளது. முறையான விகிதத்தில் ஆல்கஹால் கலந்துள்ள கிருமிநாசினி கொண்ட சோப் மற்றும் சானிடைஸரை பயன்படுத்துவது தான் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள சிறந்தவழி.
மேலும், சூடான குளியல் முறைகளினால் கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பது போன்ற வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டு வருகின்றன. இதுவும் உறுதிப்படுத்தப் படாதது. அதேபோல இந்தச் சீனப்பொருட்களைப் பயன்படுத்தினால் கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பது போன்ற விளம்பரங்களையும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
மது அருந்தினால் கொரோனாவில் இருந்து தப்பித்து கொள்ள முடியும் என்ற வதந்தியை நம்பி மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஈரானில் எரிசாராயத்தைக் குடித்து பலர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல கிருமிநாசினிப் பொருட்களான (டெட்டால்) போன்றவற்றை குடிப்பதும் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். வருமுன் காக்கிறேன் என்கிற பேர்வழியில் மருத்துவர் கொரோனா உறுதிப்படுத்தாத நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை எடுத்துக்கொண்டு உயிரிழந்தார். இதுபோன்ற அதிபுத்திச்சாலித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தாலே பாதி இழப்புகளைத் தவிர்க்கலாம்.
ஒரு நோய் பரவலின்போது ஏற்படுகின்றன அச்சம் பொதுவானதுதான். ஆனால் அதில் இருந்து தப்பிப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் அறிவியல் பூர்வமானதாக இருக்கவேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்பப் படுகின்ற அனைத்தையும் உண்மை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிப்பதே சிறந்த வழி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout