இருட்டு அறையில் முரட்டு குத்து: ஊமைக்குத்து
ஹரஹர மகாதேவகி என்ற அடல்ட் காமெடி படம் எதிர்பாராமல் சூப்பர் ஹிட் ஆனதால் அதே பாணியில் மீண்டும் அதே இயக்குனர், அதே தயாரிப்பாளர் இணைந்துள்ளனர். ஆனால் படம், அதே மாதிரி ரசிக்கும்படியான படமா? என்பதை பார்ப்போம்
காதலிப்பது பின்னர் பிரேக்-அப் செய்வது என்பதை முழுநேர தொழிலாக கொண்ட கவுதம் கார்த்திக்கிற்கு பெற்றோர் பெண் பார்க்கின்றனர். அந்த பெண் தான் நாயகி வைபவி ஷாந்திலா . கவுதமுடன் ஒரு வாரம் பழகி, பிடித்திருந்தால் தொடரலாம், இல்லையென்றால் பிரேக் அப் என்ற கண்டிஷனுடன் வைபவி கவுதமுடன் பழக சம்மதிக்கின்றார். இதற்காக ஒருவாரம் கவுதம் கார்த்தி, வைபவி, கவுதமின் நண்பர் ஷாராஜா மற்றும் அவருடைய காதலி யாஷிகா ஆனந்த் ஆகியோர் பாங்காக் செல்கின்றனர்.
பாங்காக்கில் அவர்கள் தங்கும் பங்களாவில் செக்ஸ் உறவை அனுபவிக்காத ஒரு பேய் உள்ளது. அந்த பேய் 25 வருடங்களாக வெர்ஜின் பையனுக்காக காத்திருக்கின்றதாம். இந்த பங்களாவில் கவுதமும் அவருடைய நண்பரும் பேயிடம் மாட்டிக்கொள்கின்றனர். இவர்களை காப்பாற்ற வரும் மொட்டை ராஜேந்திரன், பால சரவணன் மற்றும் கருணாகரன் ஆகியோர்களும் பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கின்றனர். பேயின் ஆசை நிறைவேறியதா? அல்லது பேயை ஏமாற்றி அந்த பங்களாவில் உள்ளவர்கள் வெளியேறினார்களா? என்பதுதான் மீதிக்கதை
கவுதம் கார்த்திக் முகத்தில் இளமை துள்ளுகிறது. இயல்பாகவே இவருக்கு காமெடி நடிப்பு வருவதால் இந்த படத்தின் கேரக்டர் சரியாக பொருந்துகிறது. கவுதமின் நண்பராக வரும் ஷா ராஜா, ஓரிரண்டு காட்சிகள் தவிர பெரும்பாலான காட்சிகளில் காமெடி என்ற பெயரில் வெறுப்பேற்றுகிறார்.
வைபவி, யாஷிகா இரண்டு நாயகிகளும் முழுக்க முழுக்க கவர்ச்சிக்காக இந்த படத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொடுத்த வேலையை மிகச்சரியாக செய்துள்ளனர். இவர்களுக்கு காஸ்ட்யூம் வடிவமைத்த காஸ்ட்யூம் டிசைனருக்கு தேசிய விருதோ அல்லது அதற்கு மேல் ஏதாவது ஒரு விருது இருந்தால் அந்த விருதை கொடுக்கலாம்
படத்தின் ஒரே ஆறுதல் கருணாகரன். இந்த கேரக்டரை ஏற்று நடிக்க எந்த நடிகரும் தயங்குவார்கள். ஆனால் தயக்கமின்றி இந்த கேரக்டரை ஏற்று, சிரிப்பையும் வரவழைத்துளார். மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றனர்.
முதல் அடல்ட் காமெடி படம் வெற்றி பெற்றதால் அதே பாணியில் படமெடுக்க கூறினால், கிட்டத்தட்ட அதே படத்தையே மீண்டும் எடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார். அடல்ட் காமெடி என்ற ஏ படம் என்பதை முடிவு செய்துவிட்டால், அதிலாவது சுவாரஸ்யமான காட்சிகளை இணைக்க வேண்டும். ஏற்கனவே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வந்த பழைய அடல்ட் ஜோக்குகளை காட்சிப்படுத்தியுள்ளார். இரட்டை அர்த்த வசனங்களையாவது சொந்தமாக யோசித்திருக்கலாம். பெரும் கற்பனை வறட்சி. பேய் வரும் காட்சியிலாவது பயம் அல்லது காமெடி இருக்கும் என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றமே
ஒளிப்பதிவு, எடிட்டிங் பற்றியெல்லாம் கூறுவதற்கு இந்த படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. பாலமுரளி பாபுவின் இசையில் பாடல்கள் சுமார் தான். ஒரு காமெடி படத்திற்கு தேவையான பின்னணி இசை இதில் உள்ளது.
மொத்தத்தில் மூன்று நாயகிகளின் கவர்ச்சியை திரையில் ரசிக்க விரும்புபவர்களுக்கு மட்டும் இந்த படம் ஓகே
Comments