இரும்புத்திரை: டிஜிட்டல் உலகின் மர்மத்திரை
விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆதார் கார்டு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக போடப்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வெளிவந்துள்ள இந்த திரைப்படம் குறித்து தற்போது பார்ப்போம்
ராணுவ மேஜர் விஷால் தனது தங்கையின் திருமணத்திற்காக வேறு வழியின்றி வங்கியில் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 லட்சம் கடன் வாங்குகிறார். அதோடு அவருடைய சொந்த பணமான ரூ.4 லட்சமும் சேர்ந்து ரூ.10 லட்சம் திடீரென அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து காணாமல் போகிறது. வங்கியில் சென்று விசாரிக்கும்போது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அவ்வளவு பணமும் செலவு செய்யப்பட்டிருப்பதாக ஸ்டேட்மெண்ட் கூறுகிறது. அப்படியானால் இந்த பணத்தை கொள்ளையடித்தது யார்? என்பதை தனது ராணுவ டெக்னாலஜி மூலம் துப்பறியும்போது தன்னை போலவே பலரும் ஏமாந்துள்ளதும், இந்த மிகப்பெரிய நெட்வொர்க்கிற்கு ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதும் தெரியவருகிறது. அந்த தலைவன் யார்? எப்படி மக்களின் பணம் திடீர் திடீரென காணாமல் போகிறது போன்ற விடைகள் தான் இந்த படத்தின் இரண்டாம் பகுதி
மாமா ரோபோசங்கருடன் ஆரம்பத்தில் அடிக்கும் கூத்து, பின்னர் மனநல டாக்டர் சமந்தாவுடன் ரொமான்ஸ், அவருடைய அறிவுரையின் காரணமாக ஊருக்கு சென்று அப்பா, தங்கையிடம் காட்டும் பாசம் என முதல் பாதி முழுவதும் காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள விஷால், இடைவேளைக்கு பின்னர் டிஜிட்டல் டானை தேடிப்போகும் காட்சிகளில் ஆக்சனில் வெளுத்து வாங்குகிறார். குறிப்பாக அர்ஜூனுடன் வசனங்களாலும் ஆக்சன்களாலும் மோதும் காட்சிகளில் விஷாலின் நடிப்பில் நல்ல முன்னேற்றம்
மனநல மருத்துவராக வரும் சமந்தாவிற்கு இந்த படத்தின் ஹீரோயின் என்ற பட்டத்தை மட்டும் இயக்குனர் கொடுத்துள்ளார். மற்றபடி இரண்டாம் பாதியில் இவர் தோன்றும் காட்சிகள் மிகக்குறைவு என்பதும் படத்தின் விறுவிறுப்பில் பார்வையாளர்கள் சமந்தாவை மறந்துவிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரோபோசங்கர் முதல் பாதியில் காமெடியும் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சீரியஸாகவும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்பாவி அப்பாவாக டெல்லி கணேஷ் மனதை தொடும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு ஆக்சன் கிங் அர்ஜூன் தான். ஒரு ஹீரோவுக்கு மாஸ் எப்போது கிடைக்கும் என்றால், அந்த ஹீரோவுக்கு ஒரு வலிமையான வில்லன் கிடைக்கும்போதுதான். ஹீரோவை விட புத்திசாலியாக வில்லன் இருக்கும் படங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றி அடைந்துள்ளது. அந்த வகையில் இந்த படம் வெற்றி பெற்றால் அதற்கு பெரிய பங்கு அர்ஜூனை சாரும். இன்பர்மேஷன் இஸ் வெல்த் என்ற வசனத்தை படத்தில் ஒருசில இடங்களில் அவர் சொல்லும் விதம் சூப்பர்.
யுவன்ஷங்கர் ராஜாவின் 'யாரிவன்' பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். பின்னணி இசையில் தான் மீண்டும் ஒரு ராஜா என்பதை நிருபித்துள்ளார். குறிப்பாக விஷாலுக்கும் அர்ஜூனுக்கும் அவர் கம்போஸ் செய்துள்ள தீம் மியூசிக் அட்டகாசம். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் மிக அருமை
முதல் பாதியில் ஸ்டண்ட் காட்சிகள் இல்லையென்றாலும் இரண்டாம் பாதியில் உள்ள ஸ்டண்டுகள் அதிர வைக்கின்றன. குறிப்பாக விஷால்-அர்ஜுன் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஆக்சன் பிரியர்களுக்கு கிடைத்த விருந்து
டிஜிட்டல் உலகம் என்பது மனிதன் கண்டுபிடித்த சொர்க்கம் என்றுதான் பொதுமக்கள் அனைவரும் இன்று வரை நினைத்து கொண்டிருக்கின்றனர். கால்குலேட்டர், ரேடியோ, டிவி முதல் கம்ப்யூட்டர் முதல் ஒவ்வொரு பொருளாக கடந்த இருபது வருடங்களுக்கு முன் வாங்கி கொண்டிருந்தோம். ஆனால் ஸ்மார்ட்போன் வந்தபின்னர் இவை அனைத்தும் தேவையில்லாமல் போய்விட்டது. கைக்குள் உலகமே அடங்கிவிட்டது என்று மனிதன் இறுமாப்பில் இருக்கும்போது, உலகம் உன் கைக்குள் அடங்கவில்லை, இந்த உலகின் கைக்குள்தான் நீ அடங்கிவிட்டாய் என்பதை எச்சரிக்கும்விதமாக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இந்த படத்தின் மூலம் கூறியுள்ளார். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மூலம் நம்முடைய டேட்டா எங்கெங்கெல்லாம் செல்கிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை ஓரளவுக்கு டெக்னாலஜி புரிந்தவர்களுக்கும் புரியும் வகையிலான காட்சிகள் அமைத்து அருமையாக விளக்கியுள்ளார் இயக்குனர். '
இனிமேல் நீ யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூட நான் தான் முடிவு செய்வேன் என்ற அர்ஜுன் பேசும் வசனத்தில் இருந்து ஆதார் கார்டின் டேட்டாக்கள் ஒரு கெட்டவன் கைக்கு போய்விட்டால், அந்த நாட்டின் எதிர்காலமே அவன் கைக்கு சென்றுவிடும் என்ற ஆபத்தையும் உணர்த்தியுள்ளார். அர்ஜூன் பாணியிலேயே விஷால் அவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் காட்சிகளுக்கு அரங்கமே கைதட்டுகிறது.
சமீபத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இனிமேல் ஸ்மார்ட்போனையே பயன்படுத்த மாட்டோம் என்று கூறியதை செய்தித்தாளில் பலர் படித்திருப்பார்கள். அதேபோல் இந்த படத்தை பார்த்தபின்னர் பலர் ஸ்மார்ட்போனை தூக்கி போட்டுவிட்டு பேசிக் போனுக்கு மாறுவார்கள் என்பது நிச்சயம். அந்த அளவுக்கு படம் பார்ப்பவர்களை பயமுறுத்தியதே இயக்குனரின் வெற்றியாக கருதப்படுகிறது.
ஒரே நாளில் ஒரு அக்கவுண்டில் இருந்து ரூ.10 லட்சம் செலவு செய்ய வங்கி அனுமதிக்குமா? உள்பட ஒருசில லாஜிக் மீறல் படத்தில் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பில் அவை கவனிக்கப்படாமல் இருக்க வாய்ப்பு அதிகம்
மொத்தத்தில் டிஜிட்டல் உலகம், அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
Comments