அரசியலில் இருந்து விலகுகிறேன்: இரோம் ஷர்மிளா அதிர்ச்சி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

பொது பிரச்சனை ஒன்றுக்காக ஒருநாள் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தாலே அதை விளம்பரப்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து வரும் அரசியல் உலகில், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) நீக்கக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளாவுக்கு கிடைத்தது வெறும் 90 வாக்குகளே.

அயராத மக்கள் போராளியான ஷர்மிளா உண்ணாநிலைப் போராட்டத்தின் போது பல முறை சிறை சென்றவர். அவர் உயிர் துறந்திவடக் கூடாது என்பதற்காக அரசு அவரது மூக்கில் குழாய் பொருத்தி உணவை ஏற்றியது. கடந்த ஆண்டு தனது போறாட்டத்தை வாபஸ் வாங்கியவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆனால் நெல்சன் மண்டேலா போல சிறையில் இருந்துவிட்டு கோட்டைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெபாசிட் பறிபோகும் தோல்வியை மக்கள் கொடுத்துள்ளனர்.


தனது தோல்வி குறித்து கருத்து கூறிய ஷர்மிளா, 'நான் துரோகம் செய்யப்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன். ஆனால் இது மக்களின் தவறு அல்ல. இந்த தோல்வியால் நான் ஏன் வருத்தப்படுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது பலர் என்னிடம் வந்து நான் உனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் நீங்கள் ரொம்ப லேட், நீங்கள் வருவதற்கு முன்பே நாங்கள் ஏற்கனவே வேறு கட்சிக்கு ஓட்டு போடுவதாக கூறி பணம் வாங்கிவிட்டோம்' என்று கூறினார்கள்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் இனிமேல் தேர்தலில் நிற்கபோவதில்லை என்றும் அரசியலில் இருந்து விலகவும் முடிவு எடுத்துவிட்டேன். இருப்பினும் நான் ஆரம்பித்த கட்சி இம்மாநிலத்தின் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடும்' என்று கூறினார்

ஆனால், புதியதாக கட்சி ஆரம்பித்த ஷர்மிளா, செல்வாக்கு உள்ள மாநில முதல்வரின் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டது தவறு என்றும், தேர்தல் உத்திகளை அரசியல் ரீதியாக அவர் கையாளவில்லை என்றும் மணிப்பூர் மாநில தேர்தலை தொடர்ந்து கவனித்து வரும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் ஷர்மிளா வெற்றிபெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று கண்ணியமான தோல்வியைப் பெறுவார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் இவ்வளவு மோசமாகத் தோற்றிருப்பது நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.