ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் வரி: நாளை முதல் அமல்

  • IndiaGlitz, [Saturday,August 31 2019]

கடைசி நேர பரபரப்பை தவிர்க்க நீண்ட தூரம் ரயில் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருவது வழக்கமாக உள்ளது. மேலும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்தால் சேவை வரி இல்லை என்பதும் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக இருந்தது.

இந்த நிலையில் நாளை முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்தால் சேவை வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.15, முதல் வகுப்பு உட்பட ஏசி வகுப்புகளுக்கு ரூ.30 வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த சேவைக் கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, ரயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு சேவை வரி வசூலிக்கப்பட்டது. ஆனால் டிஜிட்டல்' முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் அந்த சேவை வரி ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் சேவை வரி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பால் ரயில்வே பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.