ஐ.ஆர்.சி.டி.சியில் புகார் அளித்து அவமானப்பட்ட வாடிக்கையாளர்!
- IndiaGlitz, [Thursday,May 30 2019]
ரயில்களில் முன்பதிவு செய்ய ரயில்வே துறை தொடங்கியுள்ள இணையதளம் தான் ஐ.ஆர்.சி.டி.சி. இந்த இணையதளத்தில் சமீபகாலமாக கூகுள் விளம்பரங்கள் வருகின்றன. இதன் மூலமும் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ஒரு பெரிய வருமானம் வருகிறது.
இந்த நிலையில் ஆனந்தகுமார் என்பவர் ஐ.ஆர்.சி.டி.சிக்கு ஒரு புகாரை அனுப்பியுள்ளார். இந்த புகாரை அவர் ரயில்வே அமைச்சருக்கும், ரயில்வே துறையின் மேலதிகாரிகளுக்கும் ஃபார்வேர்டு செய்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியது இதுதான். நான் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் முன்பதிவு செய்ய லாகின் செய்தபோது அதில் ஆபாச விளம்பரங்கள் தோன்றுகின்றன. இந்த விளம்பரத்தால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகார் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன, ஏது என்று தெரியாமலேயே நெட்டிசன்கள் ஐ.ஆர்.சி.டி.சிக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், 'எங்கள் இணையதளத்தில் வரும் கூகுள் விளம்பரம். பயனாளிகள் ஏற்கனவே பிரெளஸ் செய்த ஹிஸ்ட்ரியை தொடர்புபடுத்தியே வரும். எனவே நீங்கள் உங்கள் பிரெளஸ் ஹிஸ்ட்ரியை டெலிட் செய்துவிட்டு ஐ.ஆர்.சி.டி.சியில் லாகின் செய்தால் இதுபோன்ற விளம்பரங்கள் வராது என்று கூறியுள்ளது. இதிலிருந்து புகார் அளித்த ஆனந்தகுமார் தன்னுடைய கம்ப்யூட்டரில் ஆபாச படங்கள் குறித்து அதிகம் சியர்ச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தற்போது நெட்டிசன்கள் புகார் அளித்த நபரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.