Download App

Iravukku Aayiram Kangal Review

இரவுக்கு ஆயிரம் கண்கள்  -  மர்ம நாவல் படித்த திருப்தி 

இளம் ஹீரோக்களில் தேடி தேடி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் அருள்நிதி இம்முறையும் அப்படிப்பட்ட ஒரு மர்ம கொலை கதையை புதுமுக இயக்குனர் மு மாறனுடன் கைகோர்த்து தந்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் காட்டப்படுவது போல் ஒரு நல்ல சுஜாதாவின் மர்ம நாவலை படித்த திருப்தி ரசிகனுக்கு நிச்சயம். 

படத்தின் ஆரம்பத்தில் ஒரு கொலை நடக்கிறது போலீஸ் கொலைகாரன் யாரென துப்பு துலக்க நமக்கு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். கால் டாக்சி ஓட்டும் அருள்நிதி மற்றும் நர்ஸ் மஹிமா நம்பியார் காதலர்கள். ஒரு கட்டத்தில் மஹிமாவை ஒரு கடத்தலிலிருந்து காப்பாற்றும் அஜ்மல் பின் அவரையே பின் தொடர்ந்து இம்சை தருகிறார். அவரை பற்றி அருள்நிதியிடம் சொல்ல இருவருக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. இந்நிலையில் மஹிமா நர்ஸ் வேலை செய்யும் பணக்கார வீட்டு பெண் சாயா  சிங்குக்கும் அஜ்மலால் பிரச்சினை அதே போல் கால் டாக்சியில் பயணம் செய்யும் எழுத்தாளர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அவரிடம் எதோ தொடர்பு மற்றும் படத்தில் வரும் ஆனந்தராஜ் நரேன் போன்றோருக்கும் அஜ்மலால் தொல்லை இருக்க அனைவரும் அவரை கொலை செய்ய புறப்படுகிறார்கள். ஆனால் அவர் வீட்டில் வேறு பிணம் கிடைக்க யார் கொலைகாரன் என்ற கேள்வி கடைசி வரை பல திருப்பங்களுடன் சொல்ல பட்டிருக்கிறது. 

அருள்நிதி வழக்கம் போல் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார் மஹிமாவிடம் அவர் பேசும் எதார்த்த வசனங்கள்,  சண்டை காட்சிகளில் வேகம் என்று தனது எல்லைக்குள் சரியாக இயங்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.  மஹிமா நம்பினார் புடவை கட்டியிருக்கும்போதும் சரி சுடிதாரில் சரி மிக அழகாக தெரிகிறார் அளவாகவும் நடித்திருக்கிறார். அஜ்மலிடம் மாட்டி அல்லல் படும் இடம் வெறி குட். பிளாக்மைல் கொள்ளை மற்றும் பெண் பித்து என்றிருக்கும் வில்லன் பாத்திரத்தில் அஜ்மல் நன்றாக நடித்து அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கிறார். அஜ்மல் பெண் ஆசை காட்டி ஏமாற்றும் முதியவராக ஆனந்தராஜ் பல இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். லட்சுமி ராமகிருஷ்ணன் சாய சிங் வித்யா பிரதீப் சுஜா வருநீ நரேன் ஜான் விஜய் என்று அனைவரும் இந்த முக்கியமான பாத்திரங்களில் சிறப்பான பங்களிப்பு தருகிறார்கள். 

படம் முழுக்க ஒரு காட்சியை காட்டிவிட்டு பின் அதனை பின்னோக்கி சென்று விளக்கும் அந்த யுக்தியே திரைக்கதையின் புதுமை மற்றும் பலம். கதாபாத்திரங்கள் மேலோட்டமாக இருந்தாலும் ஒவ்வொருத்தரும் திரைக்கதைக்கு முக்கியமான புள்ளிகளாக அமைத்த விதமும் கை கொடுக்கிறது. அந்த கொலைக்கான சஸ்பென்ஸை கடைசி வரை காப்பாற்றியிருப்பது சிறப்பு. அதே போல் இளம் இயக்குனர்களுக்கு மிக குறைந்த பட்ஜெட்டில் எப்படி கதையோட்டத்தை மட்டும் நம்பி படம் எடுப்பது என்பதற்கும் இந்த படம் ஒரு நல்ல எடுத்து காட்டு. 

மைனஸ் என்று பார்த்தல் படத்தில் வரும் எந்த திருப்பமும் எதார்த்தமானதாக இல்லாததும் சாதாரண கால் டாக்சி டிரைவர் அருள்நிதியை போலீஸ் அவ்வளவு சுலபமாக தப்பிக்க விடுவதெல்லாம் காதுல ஒரு முழம் பூ.  படத்தில் வருபவர்கள் பலரும் துப்பாக்கியை எதோ கைக்குட்டை எடுப்பது போல அவ்வளவு சாதாரணமாக உபயோக படுத்துகிறார்கள்.

ஒரு மர்ம படத்திற்கான சரியான பின்னை இசை தந்து கவனத்த்தை ஈர்க்கிறார் சாம் சி எஸ் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் சான் லோகேஷின் படத்தொகுப்பும் கச்சிதம். அறிமுக இயக்குனர் மு மாறன் ஒரு நாவலை போன்ற திரைக்கதையை நாவல் படிக்கும் அதே வடிவில் தந்திருக்கிறார் அவர் வெற்றி பெற்றிருப்பது சாமர்த்தியமான திரைக்கதையால் மர்மத்தை கடைசி வரை கொண்டு சென்றதாலும். 

மர்ம முடிச்சுகள் நிறைந்த இந்த இரவுக்கு ஆயிரம் கண்களை தாராளமாக பார்க்கலாம். 

Rating : 3.0 / 5.0