ஈராக்; கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்குக் கூட இடமில்லையா???
- IndiaGlitz, [Tuesday,March 31 2020]
ஈராக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இறந்தவர்களின் உடலில் இருந்தும் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம் என்ற பீதி அந்நாட்டு மக்களிடையே இருந்து வருகிறது. இதனால் பலரது உடல்களை அடக்கம் செய்வதற்கு அந்நாட்டு பழங்குடித் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஈராக்கில் கர்பாலா மற்றும் நஜாஃப் ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள கல்லறைகளில் அடக்கம் செய்வதற்கு கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ஈராக்கில் 1251 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். வெறுமனே 46 எண்ணிக்கைக்கே இத்தனைப் போராட்டம் என்றால் அதிக அளவில் நோய்த்தொற்று பரவும்போது நிலைமை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈராக்கில் சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்களின் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில் தற்போது நாட்டு மக்களிடமும் அச்சம் அதிகமாகி இருக்கிறது. உலக சுகாதாரத் கணக்கெடுப்பின்படி ஈராக்கில் உள்ள ஒவ்வொரு 10 ஆயிரம் பேருக்கும், வெறுமனே 14 படுக்கைகள் மட்டுமே இருக்கிறது. தற்போது மருத்துவ வசதிகளை அதிகரிக்கும் பணியில் ஈராக் சுகாதார நிறுவனம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
அந்நாட்டில் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்த முதியவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்யமுடியாமல் ஒரு குடும்பம், ஒருவார காலமாகத் தவித்துவந்ததாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்து இருக்கிறது. மேலும், உள்ளூர் கிராமங்களில் அடக்கம் செய்வதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் பல மைல் தூரங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டு இருக்கிறது.
தலைநகர் பாக்தாத்தின் வடகிழக்கில், கொரோனாவால் உயிரிழந்த 4 பேர்களின் உடலை அந்நாட்டு சுகாதார நல அதிகாரிகளின் அடக்கம் செய்ய முற்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் அதனை தடுத்துள்ளனர். இதனால் தென்கிழக்கின் வேறொரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இஸ்லாம் மத நம்பிக்கையின்படி ஒருவர் இறந்தால் 24 மணிநேரத்திற்குள் அடக்கம் செய்வது வழக்கம். ஒரு பெரிய நாட்டில் சிறிய எண்ணிக்கையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு முடியாமல் மக்கள் தவித்து வந்த நிலையில் அரசாங்கம் ஒரு பிரம்மாண்டமான இடுகாட்டினைத் தற்போது உருவாக்கி இருக்கிறது. அந்த இடுகாட்டிற்கு அமைதிப் பள்ளத்தாக்கு என்ற பெயரும் வைக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று நீர்த்துளி மற்றும் பொருட்களின் மேற்பரப்புகளில் இருக்கும் வைரஸ் கிருமிகளால் பரவுகிறது என உலகச் சுகாதார நிறுவனம் தெளிவுப்படுத்திய பின்பும் ஈராக்கில் இதுபோன்ற அச்சம் நிலவிவருவது கடும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. தற்போது அந்நாட்டு சுகாதார நிறுவனம், சடலங்கள் வழியாக கொரோனா தொற்று ஏற்படுவதில்லை எனத் தெளிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.