ஈரான் - ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: 67 பேர் பலி

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 67 பேர் பலியாகியுள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2ஆக இருந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அதிபர் ஹாசன் ரெளஹானி உடனடியாக மீட்புப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவிட்டுள்ளார். நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி அச்சத்துடன் நேற்று இரவு முழுவதும் வீதிகளில் நின்றதாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஈராக் நாட்டிலும் சாடர் நகரத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்று கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் பழைய வீடுகள் பல இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 26000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.