ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியுமா? இரண்டாம் குத்து இயக்குனருக்கு ஒரு கேள்வி!
- IndiaGlitz, [Thursday,October 08 2020]
இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி முடித்துள்ள 'இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போதே தனது கண்கள் கூசுவதாகவும், சினிமா என்பது வியாபாரமாக இருந்தாலும் அதிலும் ஒரு சமூக அக்கறை இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்கு பதில் அளித்து தனது டுவிட்டரில் பதில் கூறியுள்ள சந்தோஷ்குமார் அவர் இயக்கிய ’டிக் டிக் டிக்’ என்ற படத்தின் ஒரு ஸ்டில்லை பதிவு செய்து இந்த ஸ்டில்லை பார்க்கும் போது கண்கள் கூசவில்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் தான் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியுமா? என்று இயக்குனர் சந்தோஷ்குமாரிடம் கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ’டிக் டிக் டிக்’ திரைப்படத்தில் 3 நடிகைகள் பிகினி உடையில் காட்சி அளித்தாலும் அந்த படம் முழுக்க முழுக்க ஒரு த்ரில் படம். அந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது யாருக்கும் பிகினி காட்சி ஞாபகம் இருக்காது. த்ரில் காட்சிகளை பிரமித்து தான் ரசிகர்கள் வெளியே வந்தார்கள். ’டிக் டிக் டிக்’ படம் ரிலீஸானபோது சந்தோஷ் பிறந்திருக்கவே மாட்டார் என்பதால் அதை அவர் உணர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.
ஆனால் சந்தோஷ் இயக்கிய ’ஹர ஹர மகாதேவி’ திரைப்படத்தின் விளம்பரத்திற்காக வெளியிட்ட ஆடியோ வைரலானதால் அப்படி என்ன அந்த படத்தில் இருக்கின்றது என்பதை பார்க்க ரசிகர்கள் விரும்பினர். அதனால் அந்த படம் வெற்றி பெற்றது. அந்த ஆடியோவும் யாரிடம் இருந்து சுட்டது என்பது அவரது மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அதற்கு அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற படம் அடல்ட் காமெடி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதில் அடல்ட் விஷயமும் இல்லை, காமெடியும் இல்லை என படம் பார்த்தவர்களின் கருத்து சந்தோஷ் காதுக்கு எட்டியிருக்கும்.
அதனால் அவர் அடுத்ததாக ‘கஜினிகாந்த்’ என்ற படத்திற்கு டிராக் மாறினார். ஹிந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவை வைத்து ’கஜினிகாந்த்’ படத்தை இயக்கினார் சந்தோஷ். ஆனால் அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் மீண்டும் தனது ஆஸ்தான அடல்ட் காமெடிக்கு தள்ளப்பட்டுள்ளார் சந்தோஷ்.
இயக்குனர் பாரதிராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கியதோடு சமூக அக்கறையுடன் அவருடைய படங்கள் இருந்தது. அவருடைய படங்கள் செய்த சமூக புரட்சிகளை அடுக்கி கொண்டே போகலாம். அப்படிப்பட்ட இயக்குனர் பாரதிராஜா இயக்கிய ஒரு படத்தின் ஒரே ஒரு ஸ்டில்லை மட்டும் வைத்துக்கொண்டு, அவரை தன்னுடைய படத்தோடு ஒப்பிடுவது சரியா? என்பதை சந்தோஷ்குமாரின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.
சந்தோஷ் குமார் தாராளமாக அடல்ட் படமும் ஆபாச படமும் எடுக்கலாம், அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. அதில் அவர் நடிக்கவும் செய்யலாம். ராம்கோபால் வர்மாவை விடவா ஆபாச படம் உங்களால் எடுக்க முடியும். ஆனால் 40 ஆண்டுகாலம் இயக்குனர் இமயமாகவும், தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகமாகவும் இருந்து வரும் பாரதிராஜாவை கேள்வி கேட்கும் தகுதி தனக்கு இருக்கிறதா என்பதை அவர் தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.