ஈரானில் தொழிற்சாலை எரி சாராயத்தை குடித்த சம்பவம்: இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !!!
- IndiaGlitz, [Tuesday,April 28 2020]
கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்தில் ஆல்கஹாலை அருந்துவதன் மூலம் கொரோனாவை தடுக்க முடியும் என வதந்தி கிளம்பியது. இந்த வதந்தியை நம்பி உலகம் முழுவதும் பலரும் ஆல்கஹாலைத் தேடி அலைந்த சம்பவம் அதிர்ச்சியை வரவழைத்தது. இந்த வதந்திகளைத் தடுக்கும் பொருட்டு உலகச் சுகாதார நிறுவனம் ஆல்கஹால் குடிப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது எனச் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து உலக நாடுகள் ஆல்கஹாலுக்கு எதிராக விழிப்புணர்வை மேற்கொண்டன. கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஈரானில் தொழில்சாலைகளில் பயன்படுத்தும் எரிசாராயத்தை (மெத்தனால்) தவறுதலாக 700க்கும் மேற்பட்டோர் குடித்தாகச் செய்திகள் வெளியாகின. அதில் 66 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து, தற்போது ஈரானிய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் ஈரானில் 5,011 பேர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் ஆல்கஹால் குடித்ததாகவும் அதில் சுமார் 90 பேர் கண்பார்வையை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 7 வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 728 ஆக உயர்ந்துள்ளது எனவும் அரசு சார்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் ஆல்கஹால் விற்பனை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மதுப் பொருட்கள் கிடைக்காமல் கொரோனாவை பார்த்து பயந்த மக்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனாலை அருந்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மெத்தனாலை குடித்தால் மனித உறுப்புகள் மற்றும் மூளையில் ஏற்படுத்திவிடும். மேலும், இது மார்பு வலி, குமட்டல், ஹைப்பர் வென்டிலெஷன் போன்ற குருட்டுதன்மை முதல் கோமா வரை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது ஆகும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிருமிநாசினியை பயன்படுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றால் கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை மக்கள் உண்மை என நம்பும் பட்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்படும் என அந்நாட்டின் பல நிறுவனங்கள் தற்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற மோசமான விளைவுகளை தவிர்க்கும் பொருட்டு ஈரானில் செயல்படும் மெத்தனால் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது மெத்தனாலுக்கு ஒரு செயற்கை நிறங்களை சேர்க்க ஒப்புதல் வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளன. மக்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி மெத்தனால் தவிர மற்ற மெத்தனால் பொருட்களுக்கு நிறமிகளை சேர்ப்பதன் வாயிலாக இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும் என வலியுறுத்தியிருக்கின்றன.