ரஜினி, கமல் பட பாணியில் நூதன முறையில் தேர்வில் காப்பியடித்த ஐபிஎஸ் அதிகாரி

  • IndiaGlitz, [Tuesday,October 31 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்திலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலும் புளூடூத் மூலம் மோசடியாக தேர்வு எழுதும் காட்சிகள் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. இதேபோன்று உண்மையிலேயே ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தேர்வு எழுதி மாட்டிக்கொண்டார்.

ஐஏஎஸ் முதன்மை தேர்வு கடந்த 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 மையங்களில் தேர்வு நடந்துவருகிறது. இந்த நிலையில் சபீர்கரீம் என்ற ஐபிஎஸ் அதிகாரியும் இந்த ஐஏஎஸ் தேர்வை எழுதினார். இவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் மரியாதையின் காரணமாக இவரை சோதனையின்றி தேர்வு அறைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். 

ஆனால் சபீர்கரீம் தனது காதில் வைத்திருந்த புளூடூத் கருவி மூலம் கேள்விகளை வெளியே உள்ளே ஒருவரிடம் கேட்டு பதில் எழுதியது தேர்வு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கையும் களவுமாக காப்பி பிடிபட்ட சபீர்கரீமை தேர்வு அதிகாரிகள் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர்களின் விசாரணையில் சபீர்கரீம், ஐதராபாத்தில் உள்ள தனது மனைவி ஜாய்சியிடம் கேள்விகளை கூறி புளூடூத் மூலம் பதில் கேட்டு எழுதியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சபீர் கரீம் மீதும், அவருடைய மனைவி ஜாய்சி மீதும் எழும்பூர் போலீசார் நம்பிக்கை மோசடி(இ.பி.கோ.420) மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகேடு தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சபீர்கரீமை போலீசார் கைது செய்ததோடு அவருடைய மனைவியை கைது செய்ய ஐதராபாத் விரைந்துள்ளனர்.