ஐபிஎஸ் பதவியை துறந்து அரசியலுக்கு வரும் 'கர்நாடக' சிங்கம்'

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை என்ற ஐபிஎஸ் அதிகாரி, தனது பணியை துறந்து அரசியலில் நுழையவுள்ளார்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு பெற்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்தார். அந்த பகுதியில் அவர் தனி ஒருவராக ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். இரவில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். இதனால் அந்த பகுதி மக்கள் அவரை கர்நாடக 'சிங்கம்' என்றே அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து ராஜினாமா கடிதத்தை கர்நாடக முதல்வரிடம் அளித்துள்ளார். ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டும் தனது முடிவில் அண்ணாமலை உறுதியாக உள்ளார்.

இந்த நிலையில் இவரது ராஜினாமா குறித்து கருத்து கூறிய ரூபா ஐபிஎஸ், 'அண்ணாமலை அவர்களிடம் பேசினேன். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் நுழைகிறார். மனது பிடித்த, கடும் முயற்சியால் பெற்ற ஒரு வேலையை விட்டு செல்ல ஒரு துணிச்சல் வேண்டும், அந்த துணிச்சல் அவரிடம் உள்ளது. சில சாதனையாளர்கள், இளைஞர்கள் அரசியலில் நுழைவது மகிழ்ச்சியாக உள்ளது, அவருக்கு எனது வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். இவர்தான் சசிகலா தண்டனை வகித்து வரும் பார்ப்பன அக்ரஹார சிறையில் நடந்த முறைகேடுகளை வெளியே கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.