Ippadai Vellum Review
இப்படை வெல்லும் - விறுவிறுப்பு கொண்டு செல்கிறது
நவீன கொலைகள் மற்றும் கொள்ளைகளை படம்பிடிக்கும் கௌரவ் நாராயணன் மென்மையான காமெடி ஹீரோ உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து நம்ப முடியாத ஆனால் விறுவிறுப்பான திரைக்கதையை கொஞ்சம் காமெடி கலந்து தந்திருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் மஞ்சிமா மோகன் காதலர்கள் பெண்ணின் அண்ணன் ஆர் கே சுரேஷ் போலீஸ் உதவி ஆணையாளர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் பதிவு திருமணம் செய்ய தேதி குறிக்கின்றனர். சூரி கந்து வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பவர் ஊரில் தன் நிறை மாத கர்ப்பிணி மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்க்க அதே தேதியில் புறப்படுகிறார். சோட்டா என்ற தீவிரவாதி டேனியல் பாலாஜி ஐதராபாத்தில் ஒரு பெரிய குண்டை வெடிக்க செய்துவிட்டு அடுத்த குறி சென்னைக்கு வைத்து வருகிறார். எதிர்பாராத தருணத்தில் சூரியும் உதயநிதியும் டேனியல் பாலாஜியுடன் இணைய நேர்ந்து விட அவர்கள் இருவரும் அவன் கூட்டாளிகள் என்று போலீஸ் நினைத்து ஆர் கே சுரேஷும் ஒரே கல்லில் ரெண்டு மங்கையாக போட்டு தள்ள நினைக்க இருவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதே மீதி கதை.
தனக்கு மிகவும் பொருத்தமான கதையை தேர்வு செய்ததற்கு உதயநிநிதியை தாராளமாக பாராட்டலாம். அவரும் குறையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக தாய் ராதிகாவுடன் நெகிழ்வான பாச காட்சிகளில் கச்சிதம். ஒரு பக்கம் காதலியின் அண்ணன் மறுபுறம் பயங்கர தீவிரவாதி என்று மாட்டிக்கொண்டு தன் மூளையை வைத்து இருவரையும் சமாளிப்பது சிறப்பு. கதாநாயகனின் நண்பனாக வழக்கமான சூரியாக இல்லாமல் இதில் தனக்என்று தனி கதை இருப்பதால் சூரியும் புகுந்து விளையாடுகிறார். கர்ப்பிணி மனைவிக்கு போனில் ஆறுதல் சொல்லி நெகிழவைப்பது கந்து வட்டிக்காரனை தல ஸ்டைலில் ஏமாற்றுவது தலையில் அடிபட்டு தான் யாரென்று மறந்து தவிப்பது என்று பல காட்சிகளில் அசத்தல். மனித பாம் மற்றும் சிறுநீர் காமெடியும் உண்டு ஆனால் ஜனங்கள் சிரிக்கிறார்கள் என்ன செய்ய. சற்றே பருமனான கதாநாயகி மஞ்சிமா பார்க்க அழகாக இருக்கிறார் நடிப்பிலும் குறை ஒன்றும் இல்லை. பாசமிகு தாயக பேருந்து ஓட்டுநராக ராதிகா கொஞ்சமே வந்தாலும் நிறைவு. வில்லன்களாக ஆர் கே சுரேஷ் மற்றும் டேனியல் பாலாஜி நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் கௌரவ் கீச் குரலில் பேசும் ஒரு போலீசாக வந்து படுத்துவார் என்று நினைக்கும்போது நல்ல வேலை அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்து கொள்கிறார்.
படம் ஆரம்பிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் போக போக வேகம் பிடித்து பர பர என நகர்ந்து ஒரு சுவாரசியமான இடைவேளையை அடைகிறது. உதயநிதி மூளையை உபயோகித்து ஆரம்பத்திலேயே ஒரு பெரிய ரவுடியை அடி வாங்க செய்வது அதே யுக்தியை கையாண்டு கடைசியில் தீவிரவாதியையும் பிடிக்க வைப்பது கதாபாத்திர படைப்பில் சிறப்பு. காட்பாதர் கண்மணி பாட்டும்அதை சுற்றி வரும் செண்டிமெண்ட் காட்சிகளும் பலே.
சூரி தன் சுய நினைவை இழக்கும் போது ஏகப்பட்ட சுவாரசியமான காட்சிகளுக்கு இடம் இருந்தும் அதை கொஞ்சூண்டுக்கு மட்டுமே உபயோகித்து ஏமாற்றம். ஹீரோ ஹீரோயின் தாங்கும் அதே பிளாட்டுக்கு மேலே வில்லன் இருப்பது போலீஸ் உதயநிதி சொல்வதை கேட்டு இயங்குவது அதி பயங்கர தீவிரவாதியை சுலபமாக மடக்குவது என்று நிறைய லாஜிக் மீறல்கள். இடைவேளைக்கு பிறகு படத்தை காமெடியாக சொல்வதா இல்லை சீரியசாக கொண்டு செல்வதா என்ற குழப்பம் கதை போக்குக்கு பலத்த அடி கொடுத்துவிடுகிறது.
காட்பாதர் கண்மணி மற்றும் குலேப பாடல்களில் தான் இருக்கிறேன் என்று காட்டுகிறார் டி இமான் பின்னணி இசையில் வில்லன் ஆர் கே சுரேஷுக்கு ஒரு தீம் அதையே கொஞ்சம் மாற்றி டேனியல் பாலாஜிக்கு கொடுத்து சமாளிக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு மற்றும் பிரவீன் கே எல் படத்தொகுப்பு உயர் தரம். கவுரவ் நாராயணன் விறுவிறுப்பு குறையாமல் கதையை ஓட்டுவதில் வெற்றி பெறுகிறார் என்பது உண்மையானால் இன்னும் நன்றாக சொல்ல கதையில் இடம் இருந்தும் கோட்டை விட்டிருக்கிறார் என்பதும் நிதர்சனம்.
விறுவிறுப்பான கதையோட்டம் மற்றும் சிரிக்க ஆங்காங்கே காமடி இருப்பதால் இப்படை வெல்லும் படத்தை தாராளமாக கண்டு களிக்கலாம்.
- Read in English