ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான்
Send us your feedback to audioarticles@vaarta.com
என்ன செய்தால் சென்னை தேறும்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டியில் மிகவும் இக்கட்டான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், அடி மேல் அடி அல்ல இடி மேல் இடி வாங்கிக்கொண்டிருக்கிறது. எப்போதும் முதல் பாதியிலேயே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்வதை வழக்கமாகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.
சாம்பியன் அணியா?
சின்ன இலக்கு அல்லது எட்டக்கூடிய இலக்குகளை எட்டவே தடுமாற வேண்டிய நிலையில் பரிதாபமாகத் தவித்துவருகிறது. அதே போல ஷார்ஜா போன்ற சின்ன மைதானத்தில்கூட இமாலய இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்கத் தவறுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், கத்துக்குட்டி அணி போல தத்தளித்து வருகிறது. இதன் விளைவு எஞ்சியுள்ள 5 போட்டிகளில் அனைத்திலும் கட்டாய வெற்றி என்ற நிலையில் தற்போது உள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஆனால் சாம்பியன் அணியான சென்னை அணி மீண்டும் எழுந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இன்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஆனால் ரசிகர்களின் இந்த கனவு எதிர்பார்ப்பு எந்த நிலையை எட்டும் என்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முடிவில் தெளிவாகத் தெரிந்துவிடும் எனலாம். ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில்தான் ராஜஸ்தான் அணியும் தவித்துவருகிறது.
உடனடித் தீர்வு
அணி வீரர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய தோனி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தவனின் கேட்ச்சைத் தவறவிட்டார். ஒருவேளை அந்த ஒரு கேட்ச் போட்டியின் முடிவையே மாற்றியமைத்திருக்கலாம். அதேபோல பேட்டிங்கில் பார்ம் இல்லாமல் தோனி தத்தளிக்கிறார். சென்னை மட்டையாளர்கள் பவர் பிளேயைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. டெத் ஓவர்களுக்காக முக்கியமான பவுலர்களை ரிசர்வில் வைத்திருக்கும் எச்சரிக்கை உணர்வையும் தோனி வெளிப்படுத்தவில்லை. தொடர்ந்து சொதப்பினாலும் கேதார் ஜாதவுக்குத் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு சிக்கல்களுக்கு உடனடியாக சென்னை அணி தீர்வு காணவில்லை என்றால், சிஎஸ்கே அணி மீதான ரசிகர்களின் நம்பிக்கையையும் ஆர்வமும் குறைந்துவிடும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.
வெற்றிக்கு என்ன வழி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனடியாகச் சில வழிகளைக் கடைப்பிடித்தால் மீண்டு வர வாய்ப்பு உள்ளது.
* சிறப்பாகச் செயல்படாத ஷேன் வாட்சன் , ராயுடு உள்ளிட்ட வீரர்கள் உட்பட அனைவருக்கும் அணியில் இடம் உறுதியானதில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
* முதலில் அல்லது இரண்டாவதாக பேட்டிங் செய்தாலும், பவர் ப்ளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் குறைந்தபட்சமாக 50 ரன்களாவது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எடுக்க வேண்டும்.
* ஜகதீசன், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற இளம் திறமைகளை ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். இதை மற்ற அணிகள் தெளிவாகக் கடைபிடிக்கின்றன. உதாரணமாக நடராஜன், ராகுல் திவாத்தியா, வருண் சக்கரவர்த்தி.
* பேட்டிங் அல்லது பவுலிங் என எந்தச் சூழ்நிலையிலும் பயன்படுத்தப்படாத ஜேதர் ஜாதவை அணியில் தற்போதும் சேர்க்க முன்வருவது புதிராகவே உள்ளது.
* பிற அணிகளைப் போலக் கடைசி நேரத்தில் சென்னை அணியின் மெயின் பவுலரான தீபக் சாஹரைப் பயன்படுத்த வேண்டும். கடந்த சில போட்டிகளாக அவரை தோனி முதல் 10 ஓவர்களுக்குள் பயன்படுத்தி முடித்துவிட்டார்.
* மட்டமான பீல்டிங் கலாச்சாரத்தில் இருந்து சென்னை அணி உடனடியாக மீண்டு வர வேண்டும்.
* ஒரு சில வெளிநாட்டு வீரர்களை மட்டும் நம்பியில்லாமல், சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்திக்கொள்ளவது பலன் அளிக்கும். ஒரு போட்டியில் சொதப்பிய லுங்கி நிகிடி, இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்குவது தோனிக்கு கூடுதல் பவுலிங் தேர்வாக அமையும்.
ஸ்டோக்ஸ் முயற்சி வீண்
மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நல்ல பார்மில் இருப்பது சாதகமான விஷயம் என்றாலும், பென் ஸ்டோக்ஸின் துவக்க வீரர் முயற்சி பெரிதாகப் பலன் அளிக்கவில்லை. பவுலிங்கிலும் அந்த அணி அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதை மாற்றிக்கொண்டால் சென்னை அணிக்கு எதிராக வெற்றியை வசமாக்கலாம்.
உத்தேச லெவன்
சிஎஸ்கே: ஷேன் வாட்சன், சாம் கரன், ஃபாஃப் டூபிளஸி, அம்பத்தி ராயுடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் கான், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், சார்துல் தாகூர், கரண் ஷர்மா.
ராஜஸ்தான்: ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திவாத்தியா, ரியான் பராக், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயஸ் கோபால், ஜெய்தேவ் உனாத்கட், கார்த்திக் தியாகி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout