இராண்டாண்டுகள் கழித்தும் அதே ஃபார்முலா:

  • IndiaGlitz, [Sunday,April 08 2018]

பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பொங்கல் ரிலீஸிற்கு கொஞ்சமும் சளைக்காமல் சென்னை அணியின் ரிட்டர்ன் அமைந்தது என்றால் அது மிகையாகாது. 

வான்கடே மைதானத்தின் தன்மை அறிந்து டாஸில் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார் தோனி. சென்னைக்கே உரித்தான பாணியில் முரளி விஜய் துவக்க வீரராக மட்டுமல்லாமல் அணியிலேயே இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ரஞ்சி போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி பல்வேறு விக்கட்டுகளை சாய்த்த தீபக் சாஹர் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங்கை சோதித்தார். 'பனானா' ஸ்விங் என கூறப்படும் வக்கார் யூனிஸ் ஸ்டைல் 'அவுட்' ஸ்விங் பந்துகளை துல்லியமாக வீச, மேற்கிந்திய தீவுகளின் துவக்க வீரர் எவின் லூயிஸ் அவுட் ஆனார். 

பின்பு ரோஹித் ஷர்மாவும் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் அதிரடி ஆட்டம் ஆட நினைத்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதானமாக கிடைக்கும் வாய்ப்புகளில் சுழற்பந்து வீச்சாளர்களை பௌண்டரிக்கு விரட்ட ரன்களை குவித்தனர். 

முதல் போட்டியில் எல்லோருக்கும் பௌலிங் கொடுத்து முன்னோட்டம் பார்ப்போம் என நினைத்தாரோ என்னவோ, பவர் பிளே முடிந்தவுடன், ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா என எல்லோரையும் பந்து வீச அழைத்தார் தோனி. மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில் யாரும் 4 ஓவர்கள் பூர்த்தி செய்யாத போதே தெரிந்துவிட்டது ஆடுகளத்தில் சுழல் எடுபடாதென்று. 

தாங்கள் வீசிய முதல் ஓவரில் தாஹிரும் ப்ராவோவும் சோபிக்கமல் போனாலும் அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை கட்டுக்குள் வைத்தனர். குறிப்பாக ப்ராவோ 16,18, & 20ம் ஓவர்களை வீசி பாண்டியா சகோதரர்களை அடிக்க விடாமல் தடுக்கவே 180 ரன்கள் குவிப்பார்கள் என்று நினைத்தபோது 15 ரன்கள் குறைவாகவே ஆட்டத்தை தன் வசமாக்கினர் சென்னை அணியினர். 

இதுவரை மும்பைக்கு ஆடிவந்த ராயுடு மற்றும் பெங்களூருவில் ஆட்டம்போட்ட வாட்சனும் தங்களுடைய புதிய அணிக்காக துவக்க வீரர்களாக களமிறங்கினார். ஹார்திக் பண்டியாவிடம் வாட்சன் தன்னுடைய விக்கட்டை இழந்து வெளியேற, சின்ன தல ரெய்னாவும் குறிப்பிடும் படியாக ஏதும் அடிக்காமல் பவர் ப்ளெயின் இறுதி பந்தில் பௌண்டரி அடிக்க முற்பட்டு தேவையில்லாமல் வெளியேற ஆட்டம் சூடு பிடித்தது. 

அறிமுக வீரர் மார்காண்டே தன்னுடைய லெக் ஸ்பின் மற்றும் 'ராங் ஒன்' (லெக் ஸ்பின்னர்கள் வீசும் ஆஃப் ஸ்பின் போன்ற பந்து) வீச்சில் ராயுடுவும் தோனியும் ஆட்டமிழக்க மீண்டுமொருமுறை மும்பையில் சென்னை மண்ணைக் கவ்வுமோ என்ற பயம் ரசிகர்கள் மனதில் எழும்பியது. 

ஆனால், ஆபதபாந்தவனாக ட்வேயன் ப்ராவோ தனியாளாக ஒரு பக்கம் பௌண்டரிகளை அடித்துக்கொண்டே இருந்தாலும் எதிர் முனையில் விக்கட்டுகள் விழுந்துக் கொண்டே இருந்தது. இதனிடையே கேதார் ஜாதவ் தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ந்து ஆடமுடியாமல் வெளியேற ஒட்டுமொத்த பாரமும் ப்ராவோ மீது விழுந்தது. கொஞ்சம் கூட அசராமல் அடித்து ஆடக்கூடிய பந்துகளை பௌண்டரிகளாக மாற்றிக்கொண்டேயிருந்தார். 

18, 19, & 20வது ஓவர்களை முறையே மெக்லானகன், பும்ரா, முஸ்தஃபிஸுர் என வரிசையாக ரவுண்ட் கட்டினாலும், சென்னையின் மைந்தன் ஒத்தையிலே நிக்கேன் மொத்தமா வாங்கலே என ப்ராவோ அடிக்க ஒட்டுமொத்த அரபிக்கடலின் ஆர்ப்பரிப்பும் வங்காள விரிகுடாவின் சத்தத்தில் ஸ்தம்பித்து போனது. அதுவும் உலகின் தலைசிறந்த யார்கர் ஸ்பெஷலிஸ்ட் பும்ராவை மூன்று சிக்ஸர்கள் அடித்ததெல்லாம் உச்சகட்டம். எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்ற நிலையில் ப்ராவோ ஆட்டமிழக்க, கடைசி வீரராக மீண்டும் ஜாதவ் களமிறங்கினார். 

7 ரன்கள் என்ற தேவையிருக்க முதல் மூன்று பந்துகளை நன்றாக எதிர்கொண்டு எந்த திசையில் எவ்வாறு பந்து வீச்சாளர் செயல் படுகிறார் என்று கணித்து நான்காவது பந்தை ஸ்கூப் செய்து சிக்ஸ் அடித்தார் ஜாதவ். அடுத்த பந்திலேயே நான்கடித்து சாத்தியமே இல்லாத வெற்றியை சாத்தியப்படுத்தினார். இரண்டு வருடங்கள் கழித்து ஆடினாலும் அதே பழைய ஃபார்முலா கொண்டு கடைசி வரை திக் திக் என்று கொண்டு சென்றாலும் முதல் போட்டியே பட்டையை கிளப்பி விட்டதால் அடுத்தடுத்த ஆட்டங்கள் இன்னும் அசரடிக்கும் என்பது நிச்சயம். 

இதே அணியைக்கொண்டு தோனி களமிறங்குவாரா அல்லது தடலாடியாக மாற்றங்கள் செய்வாரா என்பது 10ஆம் தேதி தெரிந்துவிடும்.

பத்மநாபன் நாகராஜ்

More News

கமல் எனக்கு எதிரி கிடையாது: ரஜினிகாந்த் பேட்டி

ஆன்மீக அரசியல் செய்தால் ரஜினியை எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் கூறியது குறித்து ரஜினியிடம் கேட்டபோது, 'நான் கமலை எதிர்க்க மாட்டேன். அவர் என் எதிரி கிடையாது' என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

அறவழி போராட்டத்தில் கமல்-ரஜினி: களைகட்டியது வள்ளுவர் கோட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடிகர் சங்கம் உள்பட மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் அறவழி போராட்டம் காலை 9 மணி முதல் நடந்து வருகிறது.

விபிஎஃப் கட்டணம் திடீர் குறைப்பு: முடிவுக்கு வருகிறதா வேலைநிறுத்தம்

டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎஃப் கட்டணத்தை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்

வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்: பிராவோ

நேற்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்றது.

'காலா' படக்குழுவினர்களின் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பதை பார்த்தோம்.