எப்படி வசமானது இந்த வெற்றி?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
துபாயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் நாராயண் ஜகதீசனுக்கு பதிலாக பியூஷ் சாவ்லா இடம் பிடித்தார். ஹைதராபாத் அணியில் நதீமுக்கு பதிலாக அபிஷேக் ஷர்மா சேர்க்கப்பட்டார்.
முதல் பேட்டிங்
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, சுமார் 10 போட்டிகளுக்கு பின் முதல் முறையாக பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முன்னதாக 2019இல் நடந்த ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அதிக முறை சேஸிங் செய்த அணிகள் பட்டியலில் கொல்கத்தா அணியின் (9 போட்டிகள், 2014) சாதனையைச் சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அதிர்ச்சித் துவக்கம்
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக ஃபாஃப் டூ பிளஸியுடன் சாம் கரன் துவக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் இந்தக் கூட்டணி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சந்தீப் ஷர்மாவின் பந்தில் டூ பிளஸி டக் அவுட் ஆனார். இதன் பின் வந்த ஷேன் வாட்சன் கம்பெனி கொடுக்க, சாம் கரன் அதிரடி காட்டினார்.
கரனும் (31) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பின் வாட்சனுடன் இணைந்த அம்பத்தி ராயுடு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சீரான இடைவேளையில் பவுண்டரிகளாக விளாச சென்னை அணியின் ரன் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 116 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
இதன் பின் அதிரடி காட்ட முயற்சித்த ராயுடு (41) கலீல் பந்தில் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே வாட்சனும் (42) அவுட்டாக, வேகமெடுத்த சென்னை அணியின் ஸ்கோர் சற்று ஆட்டம் கண்டது.
அடுத்துக் களமிறங்கிய கேப்டன் தோனி வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்கள் அடித்து வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா கடைசிக் கட்டத்தில் 10 பந்துகளில் 25 என அதிரடி காட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
சொதப்பல் துவக்கம்
எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தொடங்கினர். வார்னர் (9) சாம் கரன் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மனீஷ் பாண்டே (4) டுவைன் பிராவோவின் அசத்தலான ரன் அவுட் மூலம் வெளியேற்றினார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ஆடினார். பேர்ஸ்டோவும் வில்லியம்சனும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். வழக்கத்துக்கு மாறாக மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ (23) ஜடேஜாவின் சுழலில் சிக்கினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தபடி இருந்த போதும் மறுபுறம் வில்லியம்சன் கிடைத்த கேப்புகளில் பவுண்டரிகளாக விளாசினார்.
30 பந்தில் 67 ரன்கள்
இவருடன் இளம் வீரர் பிரியம் கர்க் தன் பங்கிற்கு இரண்டு பவுண்டரிகள் விளாசினார். கர்க் 16 ரன்கள் எடுத்த போது கரண் ஷர்மா சுழலில் வீழ்ந்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 30 பந்தில் 67 ரன்கள் தேவை என்ற ஏற்பட்டது. வில்லியம்சன் (57) அவுட்டாக அந்த அணிக்குச் சறுக்கல் ஏற்பட்டது.
விஜய் சங்கர் (12), ரஷீத் கான் (14) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துக்கொண்டது.
வித்தியாசமான முயற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்ற கேப்டன்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான சிந்தனை உள்ளவர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக நிரூபித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை தான் கவலைக்கிடமாக இருந்தது. அதனால் அனைவரும் ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தோனி, கடந்த போட்டியில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்ட ஜகதீசனை நீக்கிவிட்டு கூடுதல் பவுலரான சாவ்லாவை அணியில் சேர்த்தார். இதனால் சென்னை அணியின் பவுலிங் வலிமையடைந்தது. 7 பவுலர்களையும் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப சரியான நேரத்தில் பயன்படுத்தினார். இது சென்னை அணிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
நேற்று தோனிக்கு சாதகமாக டாஸ் விழுந்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க சென்னை அணியின் பவுலிங் வியூகம் கைகொடுத்தது.
அதேபோல சாம் கரனைத் துவக்க வீரராக களமிறக்கிய சோதனையும் ஓரளவு வெற்றிபெற்றது. ஆனால் ஒருவேளை ரன்களை துரத்த நேர்ந்தால், அப்போதும் சாம் கரனைத் துவக்க வீரராக தொடர்ந்து தோனி பயன்படுத்த முன்வருவாரா என்பது கேள்விக்குறிதான்.
ஏற்கெனவே பந்து வீச்சில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் அணியில் மேலும் ஒரு பவுலரை ஏன் சேர்க்க வேண்டும் என்னும் கேள்வியும் எழுகிறது. சாவ்லாவைக் கரண் ஷர்மாவின் இடத்தில் சேர்த்துவிட்டு ஜெகதீசனை ஆட வைத்திருக்கலாம் என்னும் விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
எதிர்காலம் எப்படி?
இந்த ஐபிஎல் தொடரில் ராயுடு காயத்தால் அவதிப்பட்டபோது டூ பிளஸி ஏற்கனவே மூன்றாவது வீரராகக் களமிறங்கியுள்ளார். அதனால் அடுத்த போட்டியில் ஷேன் வாட்சனுடன் சாம் கரனைத் துவக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
7 பந்து வீச்சாளர்கள் தேவையில்லை; ஜகதீசனைச் சேர்த்தால் பேட்டிங் வலிமைபெறும் என்னும் யோசனையும் முன்வைக்கப்படுகிறது.
வியூகங்களும் அவற்றின் பலன்களும் ஒருபுறம் இருக்க, சென்னை அணி தனக்குத் தேவையான இமாலய எழுச்சியின் முதல் படியை வெற்றிகரமாகவே கடந்துள்ளது. போட்டி முடிந்த பின் தோனி சொன்னதுபோல, “2 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அதுதான் முக்கியம்.”
சுருக்கமான ஸ்கோர்:
சென்னை: 167/6 (20 ஓவர்கள்)
ஹைதராபாத்: 147/8 (20 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா