மும்பையில் மட்டும் ஐபிஎல் போட்டிகளா? ரசிகர்களை ஏமாற்றிய தகவல்!
- IndiaGlitz, [Friday,January 28 2022] Sports News
சர்வதேசப் போட்டிகளைவிட ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்துவருகிறது. அந்த அளவிற்கு விறுவிறுப்பை கொண்டிருக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ மும்பை நகரில் நடத்த முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ ஆலோசித்து வந்தது. பின்னர் ஒருவழியாக இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆனால் 10 அணிகளைக் கொண்ட 15 சீசன் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பை நகரின் 3 மைதானங்களில் மட்டுமே நடத்தப்படும் என பிசிசிஐ முடிவெடுத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வான்கடே, சிசிஐ, பாட்டில் ஸ்டேடியம் எனும் 3 மைதானங்களில்தான் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் வீரரர்கள் தொலை தூரங்களுக்குப் பயணிப்பதை தவிர்க்கும் வகையிலும் பேருந்து போக்குவரத்தைக் கொண்டு வீரர்களை பாதுகாக்கும் முயற்சிக்காகவும் இந்த முடிவு எட்டப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கொரோனா பரவல் குறித்து கவலை அடைந்திருக்கும் பிசிசிஐ பிப்ரவரி 12,13 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கான இடத்தை இதுவரை அறிவிக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.