அசராமல் அடித்த மும்பை; பரிதாபமாகத் தோற்ற டெல்லி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
துபாயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் டெல்லி கேபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் ராகுல் சாஹருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார்.
மட்டமான துவக்கம்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிகர் தவன் ஜோடி துவக்கம் அளித்தது. ட்ரென்ட் போல்ட் வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். தன்னுடைய அடுத்த ஓவரில் போல்ட் அஜிங்க்ய ரஹானேவை (2) வெளியேற்றினார். இவர் வெளியேறிய அடுத்த ஓவரிலேயே தவனும் (15) பெவிலியன் திரும்பினார்.
மீட்ட ஜோடி
இதையடுத்து டெல்லி அணி ஆட்டம் கண்டது. இதன் பிறகு வந்த ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் இணை அணியைச் சரிவில் இருந்து மீட்டது. முதலில் இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போகப்போக இந்த ஜோடி வேகம் எடுக்க, டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரன் வேகம் அதிகரித்தது.
சீரான இடைவேளையில் பவுண்டரிகளும் சிக்சர்களுமாகப் பறக்கவிட்ட ரிஷப் பந்த் (56) இந்த ஆண்டு ஐபிஎல் அரங்கில் தன் முதல் அரைசத்தைப் பதிவு செய்து வெளியேறினார். தொடர்ந்து ஆடிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், அரைசதம் கடந்தார். பின் வந்த ஹெட்மயர் (5) நிலைக்கவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது.
நல்ல துவக்கம்
எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டன் ரோஹித் ஷர்மா, குயிண்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. டெல்லி பந்துவீச்சை இந்த ஜோடி துவக்கம் முதலே பதம் பார்த்தது. ரபாடா வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில், மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் என டிகாக் மொத்தமாக 18 ரன்கள் விளாசினார்.
ஆனால் அடுத்த ஓவரிலேயே டிகாக் (20) ஸ்டாய்னிஸ் பந்தில் வெளியேறினார். பின் ரோஹித்துடன் இணைந்த சூர்யகுமார் யாதவ், சரளமாக ஆட, மும்பை அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவை (19) ரோஹித் ஷர்மா தேவையில்லாமல் ரன் அவுட்டாக்கினார்.
இஷான் கிஷன் அதிரடி
பின் வந்த இஷான் கிஷன் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டினார். மறுபுறம் ரோஹித் தன்பங்கிற்கு விளாச மும்பை இந்தியன்ஸ் அணி வேகமாக வெற்றியை நோக்கி நகர்ந்தது. இந்நிலையில் ஆன்ரிக் நோர்க்கியாவின் பந்தில் ரோஹித் (68) தேவையில்லாத ஷாட் அடித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த போலார்டு (9) வந்த வேகத்தில் இரு பவுண்டரிகள் அடித்து ரபாடா வேகத்தில் போல்டானார். அடுத்து ஹர்திக் பாண்டியாவும் ஆட்டமிழந்தார். ஆனால், மும்பை அதற்குள் வெற்றிக்கு மிக அருகில் வந்துவிட்டிருந்தது. ரோஹித், போலார்டு, பாண்டியா ஆகியோரின் விக்கெட்டுகள் ஆட்டத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திருப்பத்தை ஏற்படுத்திய பவுலர்கள்
ஃபைனலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது பவர் ப்ளேவில் இரு அணி பவுலர்கள் செயல்பட்ட விதம் எனலாம். முதல் ஆறு ஓவர்களில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி இந்த ஆறு ஓவர்களின் முடிவில், 41 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. ஆனால் மும்பை அணி இந்த ஆறு ஓவர்கள் முடிவில் வெறும் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது கேப்டன்
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 65 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் ஃபைனலில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் (69 ரன்கள், எதிர் - பெங்களூர், 2016) முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இளம் வீரர்
இப்போட்டியில் அரைசதம் விளாசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரிஷப் பந்த், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் குறைந்த வயதில் அரைசதம் விளாசிய இரண்டாவது இளம் வீரரானார். இவர் 23 வயது 37 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டினார். 2014இல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மன்னன் வோரா (20 வயது 318 நாட்கள்) அரைசதம் அடித்து அசத்தினார்.
எதிரும் புதிரும்
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஓவரில் அதிக விக்கெட் விளாசிய வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் வீரர் டிரென்ட் போல்ட் முன்னிலையில் உள்ளார். இவர் மொத்தமாக 14 ஓவர்களில் 7 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
அதற்கு நேர் எதிராக, போட்டியின் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளைப் பறிகொடுத்த அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்த அணி இந்த ஆண்டில் முதல் ஓவரில் மட்டும் மொத்தமாக 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் 4 விக்கெட்டுகளை மும்பை அணிக்கு எதிராக மட்டும் பறிகொடுத்துள்ளது.
ரோஹித் 200
ஃபைனலில் களமிறங்கிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இது 200ஆவது ஐபிஎல் போட்டி. இந்த தொடர் முழுதுமே எதிர்பார்த்த அளவு சோபிக்காத இவர் தனது 200ஆவது போட்டியில் தன்னுடைய முத்திரையைப் பதித்து அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரின் ஃபைனலில் இரு அணியின் கேப்டன்களும் அரைசதம் கடந்தனர். ஐபிஎல் தொடரின் ஃபைனலில் இரு அணியின் கேப்டன்களும் அரைசதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2016 ஐபிஎல் ஃபைனல் போட்டியில் வார்னர் (69), விராட் கோலி (54) ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.
ஐந்தாவது முறை
டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை அணி ஐபிஎல் அரங்கில் பங்கேற்ற 6 ஃபைனலில் 5 முறை கோப்பை வென்று அசத்தியது. தவிர, இந்த ஆண்டில் டெல்லி அணிக்கு எதிராகப் பங்கேற்ற 4 போட்டிகளிலும் டெல்லி அணியை வீழ்த்தி அந்த அணிக்கு எதிரான தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. தவிர ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011) அணியைத் தொடர்ந்து, கோப்பையைத் தக்கவைத்த இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது மும்பை அணி (2019, 2020). தவிர, கடந்த 4 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக (2017, 2019, 2020) கோப்பை வென்று சாதித்தது.
சுருக்கமான ஸ்கோர்:
டெல்லி: 156/5 (20 ஓவர்கள்)
மும்பை: 157/5 (20 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ட்ரென்ட் போல்ட்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout