டிரெண்டான தோனியின் ஒரு வார்த்தை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் முடித்துள்ளது. தனது கடைசி போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 53ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கட்டாய வெற்றியை நோக்கிக் களமிறங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியில் ஃபாஃப் டூ பிளஸி, இம்ரான் தாஹிர், சார்துல் தாகூர் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பினர்.
டாப் ஆர்டர் ஏமாற்றம்
களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுல் (29), மயங்க் அகர்வால் (29) ஆகியோர் சுமாரான துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த கிறிஸ் கெயில் (12) தாஹிர் சுழலில் வெளியேறினார். தொடர்ந்து வந்த நிக்கலஸ் பூரனும் (2) தாஹிரின் சுழலில் வெளியேற, பஞ்சாப் அணி ஆட்டம் கண்டது.
ஹூடா தந்த நம்பிக்கை
பின் வந்த மந்தீப் சிங் (14) ஓரளவு கைகொடுத்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தபடி இருந்தபோதும் தீபக் ஹூடா நம்பிக்கை அளித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களை எளிதாகச் சமாளித்த இவர் சீரான இடைவேளையில் பவுண்டரிகள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இவர் அரைசதம் கடக்க (62*) பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.
அசத்தல் ஆரம்பம்
எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு டூ பிளஸி, ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. பஞ்சாப் பவுலர்களின் பந்து வீச்சை இந்த ஜோடி நாலாபுறமும் சிதறடித்தது. ஒரு புறம் ருதுராஜ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் டூ பிளஸி அதிரடி காட்டினார். 34 பந்தில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் பறக்கவிட்ட இவர், 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ருதுராஜ் (62*) அரைசதம் கடந்து அசத்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எங்கிருந்தது இந்த அணி?
இந்தத் தொடரில் சென்னை சூப்பர் அணியின் செயல்பாடு ரசிகர்களுக்குப் புரியாத புதிராகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். துவக்கத்தில் வெற்றி, அடுத்ததடுத்து தொடர் தோல்வி, கடைசி நேர எழுச்சி எனக் குழப்பமே சென்னை ரசிகர்களுக்கு மிஞ்சியது. ஆனால் கேப்டன் தோனி மேற்கொண்ட சோதனை முயற்சி பலன் அளிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. சீனியர்கள் மீது வைத்த அளவு கடந்த நம்பிக்கைக்குக் கடந்த ஆண்டில் நல்ல பலன் கிடைத்ததுபோல இந்தாண்டும் எதிர்பார்த்தது பொய்த்துப்போனது. கடைசி நேரத்தில் தோனி தனது பழைய பாலிசியைத் தளர்த்தி ருதுராஜ், என். ஜகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்குக் கண்டிப்பாகப் பலன் கிடைத்தது.
தோனியின் எதிர்காலம்?
இப்போட்டிக்கான டாஸ் போடும்போது ஒட்டுமொத்த தோனி ரசிகர்களின் மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் விதமாக கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதுதான் தோனியின் கடைசி போட்டியா என்பதுதான் அந்தக் கேள்வி. ஏனென்றால் இந்த தொடர் முழுதும் போட்டி முடிந்த பின் எதிரணி வீரர்கள் அனைவரும் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதே இந்தப் பரபரப்புக்குத் துவக்கமாக இருந்தது. ஆனால் அந்தக் கேள்விக்கு, நிச்சயமாக இல்லை என தோனி பதில் அளித்த அடுத்த நிமிடத்தில் இருந்து #definitelynot என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகத் துவங்கியது. தொடர்ந்து இது நம்பர்-1 இடத்தையும் எட்டியது.
ஒரே ஒரு வேண்டுகோள்
தோனி அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகத் தொடர்வதில் ரசிகர்களுக்கும் 100 சதவீதம் மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு கேப்டனாக அனைவருக்கும் சமமாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. ஒரே வீரர்கள் மீது மட்டும் அளவு கடந்த நம்பிக்கையை வைக்காமல் வாய்ப்புக் கிடைத்தால் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது அனுபவ கேப்டனான தோனியின் கடமை.
சுருக்கமான ஸ்கோர்:
பஞ்சாப்: 153/6 (20 ஓவர்கள்)
சென்னை: 154/1 (18.5 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ருதுராஜ் கெய்க்வாட்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Diya Harini
Contact at support@indiaglitz.com
Comments